கொரோனா குறைந்தவுடன் முடிவு எடுக்கலாமே!


கொரோனா குறைந்தவுடன் முடிவு எடுக்கலாமே!
x
தினத்தந்தி 21 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-22T03:28:30+05:30)

எந்த முடிவை எடுத்தாலும் கொரோனாவின் வேகம் வெகுவாக குறைந்த பிறகு எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் வரும்போது, பொதுமக்களுக்கு பெரிய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அரசும் கூடுமானவரையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணியுங்கள் என்றெல்லாம் தினசரி அறிவுரை கூறி வருகிறது. 4-வது ஊரடங்கு இந்த மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதோடு ஊரடங்கு முடிந்துவிடுமா? அல்லது இன்னும் நீட்டிக்கப்படுமா? என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்க வேண்டும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தமட்டில் எல்லா பாடங்களுக்கும் தேர்வு முடிந்துவிட்டது. 10-ம் வகுப்பு தேர்வு, அதாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பெற்றோர்-மாணவர்கள் என எல்லோரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்தநிலையில் கல்வித்துறை இப்போது ஜூன் 15-ந்தேதி முதல் தேர்வு நடக்கும் என்று கால அட்டவணையும் வெளியிட்டுவிட்டது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஜூன் 15 என்பது சாத்தியம் ஆகுமா?, ஜூன் 15-ந்தேதிக்குள் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வரமுடியும்? வெளியூர்களில் இருக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வருவார்கள்? ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மாணவர்களுக்கு அதுவும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத மாணவர்களுக்கு எப்படி ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பெற முடியும்?

அனைத்துப் பள்ளிக்கூட தேர்வு மையங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு நடத்துவதற்கு உரிய வசதி இருக்குமா? ஒரு அறையில் 10 மாணவர்களை வைத்து தேர்வு நடத்தினால், எத்தனை அறைகளில் தேர்வு நடத்த வேண்டும்? எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்? ஏறத்தாழ 3 மாதங்களை நெருங்கும் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள், உளவியல் ரீதியாக தேர்வுக்கு தயாராக இருக்கமாட்டார்கள். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு குறைந்தது 15 நாட்களாவது தனி மனித இடைவெளிவிட்டு வகுப்புகள் நடத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை தமிழக அரசும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, ஜூன் 15-ந்தேதி தேர்வு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்காமல், கொரோனா குறைந்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. சி.பி.எஸ்.இ. தேர்வு கால அட்டவணையை பின்பற்றி அதே காலங்களில் தேர்வு நடத்தலாம் அல்லது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறிய யோசனையான மராட்டிய மாநிலத்தில் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற்றதாக அறிவித்தது போல, அரசு ஒரு உத்தரவு அல்லது அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை அரசும் பரிசீலிக்கலாம். எந்த முடிவை எடுத்தாலும் கொரோனாவின் வேகம் வெகுவாக குறைந்த பிறகு எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

Next Story