ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு; விளைவுகள் என்ன?


ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு; விளைவுகள் என்ன?
x
தினத்தந்தி 24 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-24T23:14:18+05:30)

ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு விளைவுகள் என்ன.

கடந்த சனிக்கிழமை ‘தினத்தந்தி’-யின் முதல் பக்கத்தில் ஆகாஷ் பயிற்சி நிறுவனம் கொடுத்த விளம்பரத்தில் முதல் 2 வரிகளில், புத்தர் சொன்ன ஒரு பொன்மொழி பிரசுரிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் புயலை அமைதிப்படுத்த முடியாது.... எனவே, முயற்சி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் என்ன செய்ய முடியும், உங்களை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள். புயல் கடந்து சென்றுவிடும்” என்ற பொன்மொழி, எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்றாலும், இந்த கொரோனா நேரத்தில் அரசுகளுக்கும், மக்களுக்கும் ஒரு பாடமொழியாகவே இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுத்துக்கொண்டே, மறுபக்கம் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை முழு வேகத்தில் மேலே கொண்டு வருவது மிக அவசியமான ஒன்றாகும். தேவை சரிந்து விட்ட நிலையில், உற்பத்தியும் வீழ்ச்சிக்கண்டு, பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் நிலைக்குப்போய்விட்டது.

இந்தநிலையில், 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி முடிவுகளை அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு, ஜூன் மாதம் நடத்த வேண்டிய கூட்டத்தை முன்கூட்டியே கடந்த வெள்ளிக்கிழமை நடத்தி முடிவுகளை அறிவித்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி, ‘ரெப்போ ரேட்’ என்றும், வங்கிகள் தங்களிடம் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்தால் அதற்கு வழங்கப்படும் வட்டி ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து குறைக்கப்பட்டு, மார்ச் மாதம் 27-ந்தேதி நடந்த கூட்டத்தில், 0.75 சதவீதம் வட்டிக் குறைத்து 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் இது 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 2.5 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல, ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ விகிதமும் 3.35 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், “ரிசர்வ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் குறைந்த வட்டிதானே கிடைக்கும். அதற்கு பதிலாக தொழில் நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்கினால், கூடுதல் வட்டி கிடைக்குமே” என்ற எண்ணத்தில் வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் 3 மாதங்கள் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, அது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பால் வீட்டுக்கடன், வாகனக்கடன்களுக்கான வட்டிவிகிதம், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவதுடன், மாதத்தவணை அளவும் குறையப்போகிறது. இதனால் மோட்டார் வாகன விற்பனையும், வீடுகள் விற்பனையும் இனி உயரும். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், மறுபக்கம் இந்த வட்டி குறைப்பால் பணத்தை சேமித்து வைக்க, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கும் வட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது. தங்கள் சேமிப்பில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்துத்தான் வாழ்க்கை சக்கரத்தை சுழல வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். “41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சுருங்கப்போகிறது. எதிர்மறை எல்லைக்குள் போகப்போகிறது. விலைவாசி கூடும் அபாயமும் இருக்கிறது” என்றெல்லாம் கூறப்படுகிறது.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, அன்னிய செலாவணி கையிருப்பு 12 மாதங்களில் இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவுத்தொகை அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பை வங்கிகள் நுகர்வோருக்கும் அளித்தால் எல்லா தொழில்களும் வளரும் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லாவற்றையும் கூட்டி, கழித்துப்பார்த்தால், வங்கிகளில் எளிதில் கடன் கிடைக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்த வட்டிக்குறைப்பு துணை நிற்கும்.

Next Story