விமானங்களுக்கு அனுமதி; பஸ், ரெயில்களுக்கு கிடையாதா?


விமானங்களுக்கு அனுமதி; பஸ், ரெயில்களுக்கு கிடையாதா?
x
தினத்தந்தி 25 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-25T22:45:59+05:30)

போக்குவரத்தை முழுமையாக தடை செய்யவேண்டும், அல்லது எல்லாவற்றிற்கும் அனுமதியளித்துவிட வேண்டும் என்பதுதான் சமுதாயத்தின் குரலாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு வரைபடத்தை பார்த்தால் கீழ்நோக்கி இறங்கியோ, சமநிலையிலோ இல்லாமல் மிக வேகமாக உயரே போய்க்கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் பாதிப்பு குறைவாக இருந்தநிலையில், இப்போது 10-வது இடத்திற்கு முன்னேறிவிட்டது. தமிழ்நாட்டிலும் கொரோனா எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விட்டது. அரசு எவ்வளவோ முயற்சி எடுக்கிறது, சோதனைகளை தீவிரப்படுத்துகிறது என்றாலும், ஒவ்வொரு நாளும் அபாயகரமான அளவில் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அரசு சமூகப்பரவல் இல்லை என்று சொன்னாலும், இந்த எண்ணிக்கை உயர்வை பார்க்கும்போது, சமூகப்பரவல் நிலை வந்துவிட்டதோ? என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்கிறது.

அகில இந்திய அளவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் கூட்டிக் கொண்டு போன பிறகு தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஏனெனில், முந்தைய நாட்களில் உள்ள பாதிப்புகளின் கணக்குகளையும், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட பாதிப்பு கணக்குகளையும் பார்த்தால் இது உறுதியாகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா, “இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் கடந்த பல நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகிற பலர் கொரோனாவோடு வருகிறார்கள் என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் இவ்வாறு புதுப்புது பாதிப்புகள் சேர்ந்து விடுகிறது. இந்தநிலையில், கடந்த 11-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் பிரதமர் காணொலி காட்சியில் பேசிய நேரத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான போக்குவரத்தை இந்த மாதம் 31-ந் தேதி வரை தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதுபோல, சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலை இருப்பதால், எங்கள் மாநிலத்தில் ரெயில் போக்குவரத்தையும் 31-ந்தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், விமான போக்குவரத்து நேற்று தொடங்கிவிட்டது. நேற்று சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் உள்பட பல ஊர்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. தமிழக அரசு, 25 உள்நாட்டு விமானங்கள் மட்டும் ஒரு நாளைக்கு வந்து இறங்கலாம், இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களுக்கு எந்த வரம்பும் இல்லை என்று அறிவித்துள்ளது. எல்லோருமே இ-பாஸ் வாங்க வேண்டும். விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா? என்று பார்க்க உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த ஊரில் வீடு இல்லாதவர்கள், அவர்களது செலவில் ஏதாவது ஒரு ஓட்டலில் தங்க வேண்டும். ஏதாவது அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டு பி.சி.ஆர். சோதனை நடத்தப்படும்.

எல்லா பயணிகள் கையிலும் அழியாத மையினால் தனிமைப்படுத்துவதற்கான ‘சீல்’ வைக்கப்படும். இதுபோல பல வழிகாட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்துவரும் பயணிகளுக்கும், பல வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்கிறவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, ரெயிலுக்கும், பஸ்சுக்கும் அனுமதி வழங்காமல் இருப்பது என்ன நியாயம்? என்றுதான் இப்போது பொதுமக்கள் கேட்கிறார்கள். வசதியுள்ளவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு வாய்ப்பு அளிப்பது போல, வசதியில்லாதவர்களுக்கு தமிழ்நாட்டிற்குள்ளும், பிற மாநிலங்களுக்கு செல்லவும் ரெயில், பஸ் வசதி இதுபோன்ற விதிமுறைகளுடன் அனுமதிக்கலாமே. ஒன்று, எடப்பாடி பழனிசாமி கேட்டதுபோல, போக்குவரத்தை முழுமையாக தடை செய்யவேண்டும். இல்லையென்றால் எல்லாவற்றிற்கும் அனுமதியளித்துவிட வேண்டும் என்பதுதான் சமுதாயத்தின் குரலாக இருக்கிறது.

Next Story