அறிகுறியில்லாமல் பாயும் கொரோனா!


அறிகுறியில்லாமல் பாயும் கொரோனா!
x
தினத்தந்தி 26 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-26T23:04:46+05:30)

அறிகுறியில்லாமல் பாயும் கொரோனா.


கொரோனா... கொரோனா... இந்த பெயரை கேட்டாலே குலை நடுங்குகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் மிக அதிகமாக போய்க் கொண்டு இருக்கிறது. மொத்த பாதிப்பில் சென்னையில் தான் மிக அதிகமான அளவில் இருக்கிறது. முதலில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களால் பாதிப்பு தொடங்கிய நிலையில், தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் பரவலை ஏற்படுத்தியது. இப்போது, அடுத்த சவாலாக விளங்குவது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிவருபவர்களால் ஏற்படும் பரவல் தான். நேற்று முன்தின கணக்குப்படி, இவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 942 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக, கொரோனா இப்போது பலமுனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பலமுனை தாக்குதல் மட்டுமல்லாமல், அதனால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டவர்கள், அவர்களோடு தொடர்பு கொண்டவர்கள் என்று, ஒரு நீண்ட நெடிய முடிவே காண முடியாத சங்கிலித் தொடர்போல பரவிக்கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத அளவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையில் இப்போது 420 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மற்றொரு அதிர்ச்சியான தகவல், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய முன்னணி கள வீரர்களுக்கும் சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தநிலையில், அவர்கள் சோர்வடைந்துவிடக்கூடாது. அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக்கு முழு கவச உடை வழங்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், நேற்று தினத்தந்தியில் வெளியிடப்பட்ட சில விளக்கப்படங்கள் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. கொரோனா நோய்க்கு அறிகுறியாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு வாங்குதல், சளி, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றை கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கிறது. 12 சதவீதம் பேர்களுக்குத்தான் அறிகுறிகள் இருந்திருக்கிறது. ஆக, அறிகுறியை வைத்துத்தான் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்பதை நிச்சயமாக முடிவு செய்ய முடியாது.

இதுபோல மொத்தம் உயிரிழந்தவர்களில் 41 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 46.5 சதவீதம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46.5 சதவீதம் பேரும் உள்ளனர். ஆண்கள் தான் அதிகமாக 69 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு வெளியிட்டுள்ள இந்த விளக்க குறிப்புகளை பார்க்கும்போது, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களையோ அல்லது மற்றவர்களையோ வெறும் வெப்ப மானியால் பரிசோதித்து பார்ப்பதில் எந்த பலனும் இல்லை என்றே தெரிகிறது. காய்ச்சல் இல்லாத பெரும்பான்மையோருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், இந்த சோதனைகள் எல்லாம் பலனளிக்காது என்றே தெரிகிறது. இந்த குழப்பத்தை தீர்க்க அரசும், மருத்துவ நிபுணர்களும் தான் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அறிகுறியே இல்லாமல் நுழைந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், கொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் அரசு ஒரு குறிப்பேடு தயாரித்து அதை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ளது. இதை அதிக எண்ணிக்கையில் அச்சடித்து பொதுமக்களுக்கு வீடு வீடாகப் போய் வினியோகிக்க கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் எல்லாம், தொடங்கவும், வினியோகிக்கவும் பல நாட்கள் ஆகும். அதுவரையில் புதருக்குள் மறைந்திருந்து தாக்கும் சிங்கம் போல, காத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாய்ச்சலில் இருந்து தப்பிப்பது மிகவும் இயலாத ஒன்று. எனவே, அரசு அந்த கால தாமதத்திற்கு இடம் கொடுக்காமல் உடனடியாக அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில், பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் விரிவாக, விளக்கமாக விளம்பரம் செய்ய வேண்டும். கொரோனா பரவலில் இருந்து இனி மக்கள் தான் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Next Story