நம்ம சென்னை, நம்ம தமிழ்நாடு ஆகுமா?


நம்ம சென்னை, நம்ம தமிழ்நாடு ஆகுமா?
x
தினத்தந்தி 27 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-27T22:50:47+05:30)

நம்ம சென்னை, நம்ம தமிழ்நாடு ஆகுமா.

இத்தனை நாளாகியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு தொடங்கப்பட்ட நாளில் 23 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மே 18-ந் தேதி மீண்டும் 4-வது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் பாதிப்பு 11,760 பேராக உயர்ந்துவிட்டது. இந்தநிலையில் தற்போது 18 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சென்னையில்தான் உள்ளனர். தற்போது 356 கட்டுப்பாட்டு பகுதிகள் சென்னையில் இருக்கின்றன.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சியும், தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்காக சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் உள்ள 26 லட்சம் பேர்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒருவருக்கு 3 என்ற கணக்கின்படி, இலவசமாக மறு பயன்பாட்டுடன் கூடிய, முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், நம்ம சென்னை கொரோனா தடுப்புத்திட்டம் என்ற ஒரு புதிய திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி, சுகாதார ஆய்வாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நம்ம சென்னை கொரோனா தடுப்புத்திட்டம்போல தமிழ்நாடு முழுவதும் நம்ம தமிழ்நாடு கொரோனா தடுப்புத்திட்டம் என்று கொண்டுவந்து எல்லா இடங்களிலும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் கொரோனா பாதிப்பை படிப்படியாக நிச்சயமாக குறைத்துவிட முடியும்.

பொதுவாக பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்தினால், ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து மற்றவர்களுக்கும் பரவிவிடாமல் தடுத்துவிட முடியும். இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேர்களில் 2,349 பேர்களுக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போதைய கணக்குப்படி, 4,962 பேருக்கு சராசரியாக பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த எண்ணிக்கை 15,743 பேர்களுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது. சென்னையைப்போல அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் தீவிரமாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இப்போது கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர். கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் பி.சி.ஆர். கருவியைத்தவிர, மேலும் ஒரு சிறிய கையடக்க கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. காசநோய் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க ‘டுருனட்’ என்ற மேஜையிலேயே வைத்து பரிசோதனை செய்யக்கூடிய ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்கும் இந்த கருவியை வைத்து மூக்கிலும், தொண்டையிலும் உள்ள சளி மாதிரியை எடுத்து பரிசோதித்தால் ஒரு மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்று தெரிந்துவிடும். நெகட்டிவ் என்று முடிவு வந்துவிட்டால் அதோடு விட்டுவிடலாம். பாசிட்டிவ் என்று வந்தால் மீண்டும் ஒருமுறை சோதனை நடத்த வேண்டும். இந்த மிகச்சிறிய கருவியை எல்லா மாவட்ட தாலுகா, ஏன் பெரிய ஆரம்ப சுகாதார நிலையங்களில்கூட பயன்படுத்தி கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பரிசோதித்துவிடலாம். பல மாநிலங்களில் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதிக விலையில்லாத, மிகவும் இலகுவான, எங்கும் எடுத்துக் செல்லக்கூடிய மிகக் குறுகிய நேரத்தில் சோதனை முடிவுகளை தெரிவிக்கும் இந்த கருவியில் ஒரேநேரத்தில் ஒன்று அல்லது இரண்டு சோதனைகள்தான் செய்ய முடியும். பெரிய அளவில் அதிக எண்ணிக்கையில் பி.சி.ஆர். கருவி மூலம் சோதனைகளை நடத்திவிட்டு, அந்தந்த பகுதிகளுக்குச் சென்று சோதனை செய்யும்போது இந்த ‘டுருனட்’ கருவியை எடுத்துக்கொண்டு போய் சோதனை செய்ய பரீசிலிக்கலாம்.

Next Story