கொரோனாவை தொடர்ந்து அடுத்த சவால் வெட்டுக்கிளியா?


கொரோனாவை தொடர்ந்து அடுத்த சவால் வெட்டுக்கிளியா?
x
தினத்தந்தி 3 Jun 2020 12:35 AM GMT (Updated: 2020-06-03T06:05:44+05:30)

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எல்லோரையுமே நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எல்லாம் கொரோனாவை எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், விவசாயிகள் எங்கே பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கிவிடுமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெட்டுக்கிளி பல்வேறு பயிர்களை பெரும்படையாக வந்து தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சியாகும். 1878-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெட்டுக்கிளி தாக்குதலால் பெரும் பயிர் சேதம் ஏற்பட்ட வரலாறு உண்டு.

ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகம், கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் வெட்டுக்கிளிகள், பாகிஸ்தான்இந்தியா நோக்கி புலம் பெயரத் தொடங்கும் என்றும், இவை இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கடந்த ஏப்ரல் மாதமே எச்சரித்திருந்தது.

இந்தநிலையில், உணவைத்தேடி பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளில் சுற்றித்திரிந்த பெரும் கூட்டமான வெட்டுக்கிளிகள், அங்கு உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், ராஜஸ்தானுக்குள் நுழைந்து, மேலும் உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துவிட்டது.

இதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானில் இருந்து கிழக்கு பக்கமாக பீகார் மற்றும் ஒடிசா வரை பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, இதுபோன்ற வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி, அதாவது விந்திய மலையைத் தாண்டி வந்ததில்லை என்றாலும், காற்று வீசும் திசையிலேயே வரும் என்பதால், இப்போது தமிழ்நாட்டுக்குள்ளும் வந்துவிடுமோ? என்ற அச்சம் இருக்கிறது.

முன்பெல்லாம் ராஜஸ்தான், பஞ்சாப் வரை மட்டும் வந்த வெட்டுக்கிளிகள் இப்போது மேலும் பல மாநிலங்களுக்குள் நுழைந்துவிட்டது. முட்டையிட்டு இனப்பெருக்கம் அதிகம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள், ஒருசில நாட்களில் பல கோடிக்கணக்கான அளவில் பல்கிப்பெருகும் அபாயம் இருக்கிறது. இந்தநிலையில், தமிழக அரசு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

ஆனால், தற்போது கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி போன்ற மாவட்ட வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. ஆனால், இவை பாலைவன வெட்டுக்கிளி வகையை சார்ந்ததல்ல, உள்ளூர் வகை வெட்டுக்கிளிகள் தான் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் தலைமையில் மூத்த அதிகாரிகள் குழு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு தினமும் காணொலிக்காட்சி மூலம் பல்வேறு ஆலோசனைகளை நடத்திவருகிறது.

ககன்தீப்சிங் பேடி மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் தொடர்பான எச்சரிக்கை அமைப்போடு தினமும் தொடர்புகொண்டு, அரசுக்கு தகவல்களை தெரிவித்துவருகிறார்.

தமிழ்நாட்டில் ஒருவேளை பாகிஸ்தானில் இருந்து நுழைந்த பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தினை பயன்படுத்துதல், மாலத்தியான் மருந்தினை, தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மற்றும் தீயணைக்கும் எந்திரங்கள் மூலம் தெளித்தல், உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்தல், வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகளை பயன்படுத்துதல், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்தமாக ஹெலிகாப்டர், ஆளில்லா குட்டிவிமானம் மூலம் தெளித்தல் என்பது போன்ற பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேளாண்மை துறை முடிவு செய்துள்ளது.

இது பாராட்டத்தக்கது என்றாலும், வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பிறகு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதைவிட, அதன் நடமாட்டத்தை முன்கூட்டியே அறிந்து, தமிழ்நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க முடியுமா? என்பதையும் அரசு ஆராயவேண்டும். ஏனெனில், இந்த வெட்டுக்கிளிகள் பகலில் தான் பறக்கும், இரவில் ஓய்வெடுக்கும். எனவே, அந்த வகையிலும் யோசிக்க வேண்டும்.

Next Story