அச்சமூட்டும் கொரோனா பரவல்!


அச்சமூட்டும் கொரோனா பரவல்!
x

தமிழ்நாடு முழுவதும் இப்போது யார் யாரிடம் பேசினாலும், கொரோனா பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனாதான் இப்போது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கிறது. அரசியல் கூட கொரோனாவை சுற்றித் சுற்றித்தான் வருகிறது.

மருத்துவ நிபுணர்கள் இந்த நோயை உடனடியாக ஒழிக்க முடியாது, ஆனால் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறார்கள். நோய் பரவலை தடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். கொரோனா பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கொரோனா தொற்றுள்ள ஒருவரோடு10 நிமிடம், 20 நிமிடம் பேசினாலே இந்த தொற்று ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். யாரிடம் தொற்று உள்ளது என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

நேற்று வரை 5 லட்சத்து 60 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. ஆக, அறிகுறி இல்லாதவர்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை மூலமாகத்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

விலகியிருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழக மக்கள் ஒவ்வொருவரும் செயல்பட்டால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் நேற்றைய கணக்குப்படி, மொத்த பாதிப்பு 28,694. இதில் சென்னையில் மட்டும் 19,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 7-ந்தேதி தான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. முதலில் பரவலுக்கு டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள், கொரோனாவை கொண்டு வந்ததுதான் காரணம் என்றார்கள். அந்த சவாலை சமாளிக்க முழு முயற்சி எடுக்கப்பட்டது. அடுத்து கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்கள், விற்பனை செய்தவர்கள், பணிபுரிந்தவர்களால் தான் கொரோனா வேகமாக பரவியது என்றார்கள். அந்த சவாலை சமாளிக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், இப்போது வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா தொற்று பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

இந்தநிலையில், 2 நாட்களுக்கு முந்தைய கணக்குப்படி, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து 1 லட்சத்து27 ஆயிரம் பேர் தமிழ்நாடு திரும்பியிருக்கிறார்கள். இவர்களின் 1,740 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, சேலம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், அந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையைவிட, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சென்னையில் பாதிப்புகள் மிக அதிகமாக உயர்ந்து கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்தால் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. எல்லா இடங்களிலும், 144 தடை உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பரவலுக்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு, பலமுனை தாக்குதல் போல, பல காரணங்கள் இருந்தாலும், மக்களுக்கு சுயக் கட்டுப்பாடு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எல்லாம் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொரோனா பரவலை கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசாங்கம் உடனடியாக எல்லா வசதிகளையும் மேற்கொள்வதற்கு தகுந்த உபகரணங்களை அளிக்க வேண்டும், நிதியுதவியை அளிக்க வேண்டும். ஆக இனி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது அரசின் கையிலும் இருக்கிறது. மக்களின் சுயக்கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எனவே, கூட்டு முயற்சி இருந்தால்தான் கொரோனாவை விரட்ட முடியும்.

Next Story