குறுவை சாகுபடிக்கு தயாராகும் தமிழ்நாடு!
பொதுவாக தென்மேற்கு பருவமழையால், மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் சற்று மழை இருக்குமே தவிர, வடகிழக்கு பருவமழையால்தான் தமிழ்நாட்டுக்கு பலன் உண்டு. ஆனால், தமிழக மக்கள் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிடக்கூடாது, நிறைய மழை பெய்ய வேண்டும் என்று வருண பகவானை வேண்டிக்கொள்வார்கள்.
தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டில் போதிய அளவு மழைபெய்யாவிட்டாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நல்லமழை பெய்யும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தால், முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர், கபினி மூலமாக காவிரியில் தண்ணீர், பரம்பிக்குளம், ஆழியாறு போன்ற அணைத் திட்டங்கள் மூலமாக மேற்கு மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தால், மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி தண்ணீர் பெருமளவில் ஓடி விவசாயம் செழிக்கும். ஆந்திராவில் நல்ல மழை பெய்தால், சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலமாக முழு அளவு தண்ணீர் கிடைக்கும்.
கர்நாடகத்தை பொறுத்தமட்டில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி, நமக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த அளவு கொடுக்காவிட்டாலும், அங்கு கனமழை பெய்தால், தேக்கிவைக்க முடியாமல் பெரும் வெள்ளச்சேதத்தை தவிர்க்க, காவிரியில் தண்ணீரை கேட்காமலேயே திறந்துவிட்டுவிடுவார்கள்.
அந்தவகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மே வரை 275 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் 92.331 டி.எம்.சி. தண்ணீரும், செப்டம்பர் மாதத்தில் 71.65 டி.எம்.சி. தண்ணீரும், அக்டோபர் மாதத்தில் 48.772 டி.எம்.சி. தண்ணீரும் கனமழையால் கிடைத்தது.
ஆக, தென்மேற்கு பருவமழை நிறைய பெய்தால் தமிழ்நாட்டிற்கு நேரடியாக பலன் கிடைக்காவிட்டாலும், இதுபோல மறைமுகமாக மற்ற மாநிலங்களை நிர்பந்தப்படுத்தி பலன் கிடைக்கும். இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1934-ம் ஆண்டு இந்த அணை பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்ட நேரத்தில் இருந்து, இப்போதுதான் 17-வது முறையாக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு தான் ஜூன் மாதம் 6-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த 86 ஆண்டுகளில் 10 முறை ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி. மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில், காவிரி ஆறு மற்றும் கிளைக் கால்வாய்களை தூர்வார தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து, இந்த 8 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல், செப்பனிடுதல் போன்ற பணிகளை கவனிப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பொறுத்தமட்டில், இப்போது குறுவை சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கமான குறுவை சாகுபடிக்கும், உற்பத்திக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யவும், 5.6 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சம்பா மற்றும் தாளடி சாகுபடிகள்தான் அதிகப்பரப்பில் பயிரிடப்பட்டு, அதிக அளவு நெல் உற்பத்தி கிடைக்கும் என்பதால், இப்போது குறுவைக்கு எப்படி திட்டமிட்டு தமிழக அரசு வேகமாக செயல்பட்டதோ, அதுபோல சம்பாவுக்கும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு மட்டுமல்ல, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் மிகச்சீரிய இடத்தை பெறமுடியும்.