தாமதமானாலும் நல்ல முடிவு!


தாமதமானாலும் நல்ல முடிவு!
x
தினத்தந்தி 9 Jun 2020 10:33 PM GMT (Updated: 9 Jun 2020 10:33 PM GMT)

உலகிலேயே கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது.

தொடக்கத்தில் இருந்தே கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், விலகியிருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்பதுதான் தமிழக அரசின் வேண்டுகோளாக இருக்கிறது. கூட்டமாக கூடும் இடங்களைத் தவிர்த்தாலே கொரோனா பரவலைத் தவிர்க்க முடியும்.

இந்தநிலையில், பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் விடுமுறை விட்டிருக்கும் நேரத்தில், 1-ம் வகுப்பு முதல்9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் எல்லோரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. 10-ம் வகுப்பு, அதாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முதலில் ஜூன் 1-ந்தேதி என்றும், பிறகு ஜூன் 15-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா மிக அதிகமாக பரவிவரும் சூழ்நிலையில் ஜூன் மாதம் 15-ந்தேதி தேர்வு நடத்த வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து மட்டுமல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்பின. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி, இன்று தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக்கூட அறிவிக்கப் பட்டிருந்தது.

நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் வினித்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர்இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்காக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். “9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளை திறப்பதுபோன்று இந்த தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது. இந்த நேரத்தில், தேர்வுகளை நடத்துவது என்பதற்கு எந்தவித அர்த்தமும் இல்லை. கொரோனா தொற்று பரவல் முடிந்தவுடன் தேர்வை நடத்தலாமே?. தேர்வு எழுத அனுமதித்தால் ஒரு மாணவரும் கொரோனாவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று உறுதிமொழி தருவதற்கு மாநில அரசு தயாரா?” என்று கேட்டு, தமிழக அரசின் விரிவான பதிலை 11-ந்தேதி தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஏற்கனவே, தெலுங்கானா அரசாங்கம் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவித்தது. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பகலில், கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்று வல்லுநர்கள், இந்த நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய்த்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய்த்தொற்றில் இருந்து காக்க,10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர் வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும். 11-ம் வகுப்பு தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடுத்த இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. அரசின் இந்த முடிவால், கொரோனா பயத்தோடு தாங்கள் பெற்ற பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்புகிறோமே என்று தவித்த பெற்றோரும், கொரோனா வந்துவிடுமோ? என்ற அச்சத்தோடு தேர்வு எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த மாணவர்களும், அதே பயத்தோடு இருந்த ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.பெட்டர் லேட் தேன் நெவர் என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப தாமதமானாலும் நல்ல முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியதாகும். 

Next Story