கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகளை நடத்தலாமே!


கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகளை நடத்தலாமே!
x
தினத்தந்தி 12 Jun 2020 8:42 PM GMT (Updated: 2020-06-13T02:12:15+05:30)

கொரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் மிகவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போவது அச்சமூட்டும் வகையில் உள்ளது.

கொரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் மிகவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போவது அச்சமூட்டும் வகையில் உள்ளது.

மே 25-ந்தேதி முதல் ஊரடங்கு தொடங்கி, இப்போது 4-வது கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. 15-ந்தேதி தொடங்க வேண்டிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வையே அரசு ரத்து செய்துவிட்டது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வரை பள்ளிக் கூடங்களை திறக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவல் பெருமளவில் குறைந்த பிறகுதான், பள்ளிக்கூடங்களை திறப்பது பற்றியே யோசிக்க வேண்டும். ஏனெனில், பள்ளிக்கூடங்களை திறந்தால், மாணவர்கள் மொத்தமாக கூட வேண்டிய நிலைமை ஏற்படும். விளையாட்டு பருவம் சமூக இடைவெளியை பின்பற்றவைக்காது. நோய்த் தொற்று அறிகுறி இல்லாத ஒரு மாணவராலோ, ஆசிரியராலோ அல்லது ஊழியர்களாலோ பெருமளவில் தொற்று பரவுவதற்கான அபாயம் இருக்கிறது.

ஆனால், பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருந்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடும். படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும். பாடங்களும் மறந்துவிடும். இதன் காரணமாக பல தனியார் பள்ளிக்கூடங்கள், மாணவர் களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கிவிட்டன. சில பள்ளிக்கூடங்களில் 4-வது வகுப்பில் இருந்தும், சில பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி.யில் இருந்தும் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு சில பள்ளிக்கூடங்களில் மிக திட்டமிட்டு வகுப்புகளை நடத்துகிறார்கள். சென்னை தாம்பரம் அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் காலை 9 மணி முதல் 9.45 மணி வரை ஆன்-லைன் வகுப்புகள் நடத்தி, அடுத்து 15 நிமிடம் இடைவெளிவிட்டு, அடுத்த 45 நிமிடங்கள் கம்ப்யூட்டர் திரையை பார்க்கத் தேவையில்லாத வகையில், பாடத்தை காகிதத்தில் பிரதியாக எடுத்துப் படிக்க ஏற்பாடு செய்கிறார்கள். அதன்பிறகு, மீண்டும் இதேபோல சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் ஐபேடு, லேப்டாப், கம்ப்யூட்டர், இணையதளம் போன்ற வசதிகளை வைத்திருப்பதால் படிக்க முடிகிறது. பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் இதை வரவேற்கிறார்கள். பல கண் சிகிச்சை நிபுணர்கள், மாணவர்கள் இவ்வாறு ஆன்-லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும்போது, 20 நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து திரையில் பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டர் திரைக்கும், மாணவர்களுக்கும் இடையில் 2 அடி வரை இடைவெளி வேண்டும். கண்ணை சிமிட்டாமல் பார்க்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். பல கல்வியாளர்கள் இளம் வயதில் ஆன்-லைன் வகுப்புகள் தேவையில்லை, அது அவர்கள் மனநிலையை பாதிக்கும், கண் பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் 5-ம் வகுப்பு வரை ஆன்-லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்-லைன் வகுப்புகளை நடத்தலாமா? நடத்தக்கூடாதா? எந்த வகுப்பு முதல் எந்தெந்த முறையில் நடத்தலாம்? என்பது குறித்து தமிழக கல்வித்துறை, உடனடியாக நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை அறிவிக்கவேண்டும். ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று முடிவெடுத்தால், அதுபோன்ற வாய்ப்புகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கு ஆன்-லைன் மூலம் கல்வி கற்க வசதியில்லை.

ஆனால், அத்தகைய ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு தமிழக கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களும் வீட்டில் இருந்தவாறே அதை டெலிவிஷனில் பார்க்க முடியும். ஒவ்வொரு வகுப்புக்கும், அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப ஒளிபரப்புக்கான நேர வரையறையை நிர்ணயித்து பாடங்களை நடத்தலாம். இதன்மூலம் சமமான கற்றல் வாய்ப்பை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வழங்குவதாக அமையும்.

Next Story