இந்திய மண்ணின் வீரம்!


இந்திய மண்ணின் வீரம்!
x
தினத்தந்தி 17 Jun 2020 9:30 PM GMT (Updated: 17 Jun 2020 6:50 PM GMT)

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏறத்தாழ50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கொடிநாள் செய்தியில், “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலைபோனதில்லை. தமிழரின் வீரமும் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று கூறினார்.

றைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கொடிநாள் செய்தியில், “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலைபோனதில்லை. தமிழரின் வீரமும் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று கூறினார். அதற்கேற்ப லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ மோதலில் இணையற்ற வீரத்தோடு போராடிய 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்த ஹவில்தார் பழனியும் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி எல்லோரையும் துயரமடைய வைத்துள்ளது.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சரித்திர காலம் தொட்டு வர்த்தக, கலாசார, ராஜ்ஜிய உறவுகள் இருந்தாலும், பிற்காலங்களில் அவ்வப்போது எல்லைத்தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, 1914-ம் ஆண்டு இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கம், சீனா, திபெத் இடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, லடாக் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானதாகும். ஆனால், 1949-ம் ஆண்டில் சீனாவில் ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்டு கட்சி, அப்போது முதல் லடாக் பகுதிகளை தங்களுடையது என்று, சொந்தம் கொண்டாடி வருகிறது.

இருநாட்டுக்கும் இடையே காஷ்மீர் பகுதியில் இருந்து அருணாசலபிரதேசம் வரை 3,488 கிலோ மீட்டர் தூரம் எல்லை இருக்கிறது. இதில் லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் போன்ற பகுதிகளில் அடிக்கடி எல்லையைத் தாண்டி சீன ராணுவம் அத்துமீறி நுழைவது வாடிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், கிழக்கு லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு இல்லாமல் சீன ராணுவம் அத்துமீறி தொடங்கிய இந்த மோதலில், சீன வீரர்கள் இரும்பு தடிகளாலும், ஆணி அடிக்கப்பட்ட மூங்கில் கம்புகளாலும் தாக்கினார்கள். இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனத் தரப்பில் 43 வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அருணாசலபிரதேச எல்லையில், ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்ததற்கு பிறகு, கடந்த 45 ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே என்ன தான் மோதல் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய நிலையிலும், பிரதமர் மோடி 5 முறை சீனா சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அதிகாரிகள் மட்டத்தில் எல்லைப்பகுதியிலேயே இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையிலும், சீனா இவ்வாறு அத்துமீறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இருநாடுகளுமே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது போராட வேண்டியது கொரோனாவை எதிர்த்துதானே தவிர, இந்தியாவை எதிர்த்தல்ல என்பதை சீனா புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை இந்த மோதலை சீனா ஆதரிக்கவில்லை என்றால், உடனடியாக 1993-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி எல்லைக்கோட்டு பகுதியில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போடப்பட்ட ஒப்பந்தத்தை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, சீனா தனது நாட்டு ராணுவத்திலுள்ள அதிகாரிகள் முதல் கடைநிலை ராணுவத்தினர் வரை தெளிவுபடுத்த வேண்டும்.உடனடியாக அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையையும், ராஜ்ஜிய உறவிலான பேச்சுவார்த்தையையும் இருநாடுகளும் விரைவுபடுத்த வேண்டும். வருகிற திங்கட்கிழமை இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர், ரஷிய மற்றும் சீன வெளிவிவகாரத்துறை மந்திரிகளோடு நடத்தப்போகும் காணொலிக்காட்சி பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்காக இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரர் பழனிக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடே வீரவணக்கம் செலுத்துகிறது.

Next Story