வாட்ஸ்அப் செய்திகளுக்கு யார் பொறுப்பு?


வாட்ஸ்அப் செய்திகளுக்கு யார் பொறுப்பு?
x
தினத்தந்தி 18 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-19T00:52:33+05:30)

வாட்ஸ்அப் செய்திகளுக்கு யார் பொறுப்பு.


இப்போதெல்லாம் கையில் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் போதும், எந்த நேரமும் வாட்ஸ்அப்பில் என்ன செய்தி வந்திருக்கிறது? பேஸ்புக்கில் என்ன சொல்கிறார்கள்? யூடியூப்பில் என்ன வந்துள்ளது? டுவிட்டரில் யார் பதிவு செய்திருக்கிறார்கள்? இன்ஸ்டாகிராமில் என்ன படம் வந்திருக்கிறது? என்றெல்லாம் அவ்வப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தகவல்களுக்காக பத்திரிகைகளையும், டெலிவிஷன்களையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ள மக்கள், இப்போது இத்தகைய சமூக ஊடகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதில் வரும் செய்திகள் எல்லாம் உண்மையான செய்திகள்தானா? என்றால் நிச்சயமாக இல்லை. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். பாம்பு என்று தாண்டவும் முடியவில்லை. பழுது (கயிறு) என்று மிதிக்கவும் முடியவில்லை என்பார்கள். அதுபோல, சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பல நேரங்களில் உரிமை மீறல் அடிக்கடி நிகழ்வது சமூக ஊடகங்களில்தான். சமூக ஊடகங்கள் கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறவர்களை சமூக விரோதிகள் என்றே சொல்லலாம்.

உலகில் மிகப்பெரிய வன்முறை தனி மனிதனின் புகழ் மீது செலுத்தப்படும் அவதூறுகளும், உண்மைக்கு மாறாக திரித்து கூறப்படும் செய்திகளைப் பரப்புவதும்தான். இது பலருக்கு எளிதாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கிறது. அடுத்தவர்களை அழவைத்து பார்ப்பதிலும், ஏமாற்றிப் பார்ப்பதிலும் ஆனந்தப்படும் ஊனப்பட்ட உளவியலும் இருக்கிறது. இப்படியொரு பெரிய தவறான செய்தி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வாட்ஸ்அப்பில் பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்காமை ஊராட்சி மேல்வசந்தனூர் கிராமத்தில் உள்ள ஒரு கண்மாயில், ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து கிடப்பதாகவும், அதில் 7 பேர் பயணம் செய்ததாகவும் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. பாதி எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் படமும் இருந்தது. இதைப் பார்த்தவுடன் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள், இது இந்திய விமானப்படைக்கு சொந்தமானதா? என்று கேட்டபோது, அந்த நேரத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரோ, விமானமோ எதுவும் அந்த இடத்தில் பறக்கவில்லை என்ற தகவல் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்றனர். ஆனால், அங்கு ஒரு கருவேலம் மரம்தான் எரிந்து கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பில் வந்த படம் இந்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அமெரிக்காவில் கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட்டும், மேலும் 7 பேரும் மரணமடைந்த ஹெலிகாப்டர் விபத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் அவை. அந்த படத்தை பதிவுசெய்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து என்று வாட்ஸ்அப்பில் செய்தி வெளியிட்டுவிட்டார்கள்.

பத்திரிகைகளிலோ, டெலிவிஷனிலோ ஒரு செய்தி தவறாக பிரசுரிக்கப்பட்டாலோ, ஒளிபரப்பப்பட்டாலோ, அதன் ஆசிரியர், வெளியீட்டாளர், உரிமையாளர் எல்லோருமே அதற்கு பொறுப்பேற்று நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல நேரங்களில் திருத்தம் போட்டு வருத்தம் தெரிவிக்கும் நிலையும் ஏற்படும். ஆனால், சமூக ஊடகங்களில் இவ்வாறு தவறான செய்திகளை பரப்புவதற்கு யாரும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. கடின உழைப்பினாலும், மிகுந்த பொருட்செலவினாலும் வெளியாகும் பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு காப்பி ரைட் உண்டு. எனவே, பத்திரிகைகளை வாட்ஸ்அப்பில் வெளியிடுவது நெறிமுறைகளுக்கு விரோதமானது மட்டுமல்ல, சட்ட விரோதமானதும் ஆகும்.

வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஏதாவது தவறான செய்திகள்வந்தால், அதற்கு அந்த ஊடகங்களின் நிர்வாகமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். இதற்குரிய சட்டங்களை உலக அளவிலும், நமது மத்திய, மாநில அரசுகளும் பிறப்பிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் சரியான செய்திகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை அந்த ஊடகங்கள் சரிபார்த்த பிறகே பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால்தான் இதுபோன்ற தவறான செய்திகளை தடுக்க முடியும்.

Next Story