இந்த வலியைத் தாங்கினால்தான் நிவாரணம்!


இந்த வலியைத் தாங்கினால்தான் நிவாரணம்!
x
தினத்தந்தி 19 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-20T01:40:52+05:30)

இந்த வலியைத் தாங்கினால்தான் நிவாரணம்.


உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவர்களிடம் சென்றால், பல நேரங்களில் ஊசி போடுவார்கள். அந்த ஒரு சில நொடிகள் வலி அதிகமாக இருக்கும். ஆனால், அதற்குப் பிறகு நோயில் இருந்து முழுச் சுகம் கிடைக்கும். இதுபோல, பல நன்மைகள் சில வலிகளைத் தாங்கினால்தான் கிடைக்கும்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 2-வது இடத் தில் இருக்கும் தமிழ்நாட்டில், ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அரசும் நடவடிக்கைகள் எடுக்கிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. மொத்த கொரோனா பாதிப்பில், ஏறத்தாழ 75 சதவீத பாதிப்பு சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும்தான் இருக்கிறது.

மக்கள் சமூக இடைவெளியில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருக்கியடித்துக் கொண்டோ, அருகருகில் நின்றுகொண்டோ இருந்தால், கொரோனா பரவல் எளிதாகிவிடும் என்பதற்கு, கோயம்பேடு மார்க்கெட் ஒரு சான்றாக இருந்தாலும், மக்கள் மனதில் எந்த அச்ச உணர்வும் இல்லை. பாதுகாப்பு உணர்வும் இல்லை. எனவே, சாப்பிட மறுக்கும் பிள்ளைக்கு கண்டிப்புடன் உணவு ஊட்டிவிடும் தாயைப்போல, தமிழக அரசு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும், நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில அத்தியாவசிய பணிகளைத் தவிர, எந்த நடமாட்டமும் தேவையற்று இல்லாத அளவுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 12 நாட்களும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வாகனங்களை பயன்படுத்தாமல், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நடந்துசென்று பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் பகுதிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக அரசு வழங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த 1000 ரூபாயையும் மக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கவேண்டியதில்லை. 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நியாயவிலைக்கடைக்காரர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அந்தப் பணத்தை வழங்குவார்கள் என்று உணவுத் துறை அமைச்சர்ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதைத்தான் அரசு தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு இந்த பகுதிகளை சுற்றி ஒரு தடுப்பைக் கட்டியிருப்பதைப்போல, கட்டுப்பாட்டு அரண்களை அமைத்துள்ளது. பல அடுக்குகளில் சோதனைகள் நடக்கின்றன. சென்னையைவிட்டு வெளியே செல்வதும், சென்னைக்குள் வருவதும், சென்னைக்குள்ளேயே நடமாடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது 144 தடை உத்தரவு மீறல் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதையொட்டி, நேற்று முதல் 30-ந்தேதி வரை மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, இந்த4 மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு தலைமைச்செயலாளர் கே.சண்முகம்5 பக்கங்களில் அறிவுரைகள், வழிமுறைகள் கொண்ட கடிதத்தை எழுதியுள்ளார். நேற்று தொடங்கிய நடவடிக்கை 30-ந்தேதி வரை சற்றும் தொய்வில்லாமல் செயல்படுத்தப்பட்டால், கொரோனாவை இந்தப் பகுதிகளில் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், இதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக வெளியே வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஊரடங்கு போன்ற வலிகளை மக்கள் தாங்கினால்தான், கொரோனா பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Next Story