சீனாவிற்கு எதிராக வர்த்தக தடை?


சீனாவிற்கு எதிராக வர்த்தக தடை?
x
தினத்தந்தி 22 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-23T00:31:19+05:30)

சீனாவிற்கு எதிராக வர்த்தக தடை.


கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்பே சீன ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட குலாம் ரசூல் கல்வான் என்ற வழிகாட்டியின் பெயரில்தான் இந்த பள்ளத்தாக்குக்கு கல்வான் என்று பெயரிடப்பட்டுள்ளது. 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்கள் இந்தப்பகுதிகளில் சாகச பயணங்கள் மேற்கொள்வது உண்டு. அப்போது, லே பகுதியில் பிறந்த கல்வான் வழிகாட்டியாக இருந்து அவர்களை அழைத்துச்செல்வது வழக்கம். ஒருமுறை கல்வான் பகுதியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, குதிரையில் வந்த 4 சீன ராணுவ வீரர்கள், அவர்களை மிருகத்தனமாக தாக்கினார்கள். அந்த தாக்குதலில் கல்வான் மரணமடைந்தார். அரசிதழ்களில் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, சீன ராணுவ வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறுவது 120 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது. இந்த விஷயத்தில், இந்தியா தனது உரிமையை விட்டுக்கொடுக்காமல் நிலைநாட்ட வேண்டும். எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுத்துப்போக முடியும். இதற்கிடையே, சீனாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் எல்லா தரப்பில் இருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சீனா தாக்குதல் நடத்தும் போதெல்லாம், இதைத்தான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இப்போது இதுகுறித்து தீவிரமாக ஆராயவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதன் தொடக்கமாக, உத்தரபிரதேசத்தில் ரெயில் நிலையங்களுக்கு இடையே சிக்னல்கள் அமைப்பது தொடர்பாக சீனாவோடு மேற்கொண்ட ஒரு ஒப்பந்தத்தை ரெயில்வே துறை ரத்து செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைவிட, அங்கிருந்து இறக்குமதி செய்வதுதான் அதிகம். சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும், ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆண்டுக்கு 5,360 கோடி டாலராகும். ஆக, இந்தியா மூலம்தான் சீனாவுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்தியாவின் மொத்த மின்னணு சாதனங்களின் இறக்குமதியில் 45 சதவீதமும், மருந்து பொருட்களின் மூலப்பொருட்களை எடுத்துக்கொண்டால் 65 முதல் 75 சதவீதமும், உரத்தை எடுத்துக்கொண்டால் 28 சதவீதமும், பொம்மை போன்ற விளையாட்டு சாதனங்களை எடுத்துக் கொண்டால் 75 சதவீதமும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என்று மத்திய அரசாங்கம் முடிவெடுத்தால், நிச்சயமாக இந்த பொருட்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால், அதற்கு கால அவகாசமும் வேண்டும், விலையும் அதிகம் கொடுக்க வேண்டியது இருக்கும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதியை நிறுத்தினால் 40 சதவீதம் அளவுக்கு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கம் சீன இறக்குமதியை வேண்டாம் என்று முடிவெடுத்தால், நாட்டு மக்கள் தேசபக்தியை மனதில் நினைத்துக்கொண்டு, கூடுதல் விலை கொடுக்கும் தியாகத்தை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கடி நிலை நேரத்தில், இந்தியனாய் இரு, இந்திய பொருட்களை வாங்கு என்ற கோஷம் பெரிய அளவில் எழுப்பப்பட்டது. இப்போது நரேந்திரமோடி, இந்தியாவில் தயாரிப்போம். சுயசார்பு இந்தியா என்று புதிய உத்வேகத்தை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளார். எனவே, நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாமே நம் நாட்டில் தயாரிக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் மின்னல் வேகத்தில் எடுக்க வேண்டும். மக்களும் இந்த நேரத்தில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாட்டு பற்று என்ற வகையில் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

Next Story