சீனாவிற்கு இந்தியாவின் கண்டனம்!


சீனாவிற்கு இந்தியாவின் கண்டனம்!
x
தினத்தந்தி 23 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-24T00:07:27+05:30)

சீனாவிற்கு இந்தியாவின் கண்டனம்.


ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு, 2-வது உலகப் போரில் ரஷியா அடைந்த வெற்றியின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள, இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார்.

1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கிய 2-ம் உலகப்போர், 1945-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதிதான் முடிவடைந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் பாதிப்புகளை உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனுபவித்தன. முதல் உலகப்போர், 2-ம் உலகப்போர், இந்த2 போர்களுக்குமே தொழில் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய மனப்பான்மைதான் காரணம். இந்த 2 போர்களிலுமே ஜெர்மனி படுதோல்வி அடைந்தது.

முதல் உலகப்போருக்கு பிறகு, 1933-ம் ஆண்டு ஜெர்மனி அதிபரான ஹிட்லரின் சர்வாதிகாரத்தின் கீழ், ஜெர்மனி உலக அதிசயமாக எல்லா பலத்தையும் பெற்றது. முதல் உலகப்போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கவே 2-ம் உலகப்போரை ஜெர்மனி தொடங்கியது. போலந்து நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்தது தான் 2-ம் உலகப்போர் தொடங்குவதற்கு அச்சாரமாக விளங்கியது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன. ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் ஜெர்மனி பக்கம் அணிவகுத்து நின்றன. இந்த நாடுகள் எல்லாம், அச்சு நாடுகள் என்றும், அதை எதிர்த்து போரிட்ட இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நேச நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன.

இந்தப்போரில், இருதரப்பிலும் சேர்த்து 4 கோடி முதல்5 கோடி வரை உயிரிழப்புகள் ஏற்பட்டன. இறுதிக்கட்டத்தில் ரஷியாவிடம் ஜெர்மனி தோற்றது. மேற்கு நோக்கி ரஷியப்படைகள் முன்னேறி ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரை கைப்பற்றியது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வெற்றியை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 75-வது ஆண்டு என்பதால் சிறப்பாக கொண்டாடுகிறது.

இந்தப் போரின்போது, ஆங்கிலேய ஆட்சியில் இருந்த இந்திய ராணுவமும், குறிப்பாக சீக்கிய படைப்பிரிவும் ஜெர்மனிக்கு எதிரான போரில் குதித்தன. மாஸ்கோவில் இன்று நடக்கும் பிரமாண்ட வெற்றி விழாவில் பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் சீக்கிய படைப்பிரிவு உள்பட முப்படையின்75 ராணுவ வீரர்கள் அணியும், அங்கு நடக்கும் அணி வகுப்பில் மிடுக்காக கலந்துகொள்கிறது. இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சீனாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீன ராணுவ மந்திரியும் அங்குவருவதால், இருவருக்கும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இல்லை என்றாலும், நேருக்கு நேர் சந்திக்கவோ, ஒருவேளை பேச்சு வார்த்தைகூட நடத்தவோ வாய்ப்பு இருக்கலாம். அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், ராஜ்நாத்சிங் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தது குறித்தும், பலர் காயமடைந்தது குறித்தும், நமது கண்டனத்தையும், கடும் எதிர்ப்பையும் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என்பதை மத்திய அரசாங்கம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

ஏற்கனவே, நமது வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர், சீன வெளிவிவகாரத்துறை மந்திரி வாங் யி இடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். நேற்று முன்தினம் 11 மணி நேரத்திற்கு மேலாக சீன பகுதிக்குள் நடந்த, இருதரப்பு ராணுவ ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், நமது தரப்பில் இருந்து என்னென்ன வகையில், எல்லைப் பகுதிகளில் சீனா பின்வாங்க வேண்டும் என்று கூறப்பட்டதோ?, அதையெல்லாம் ராஜ்நாத்சிங், சீன மந்திரியிடம் வலியுறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும். மொத்தத்தில் அனைத்து மட்டத்திலும் இந்தியாவின் கடும் கண்டனக் குரல் சீனாவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

Next Story