பா.ஜ.க.வுக்கு கைகொடுத்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்!


பா.ஜ.க.வுக்கு கைகொடுத்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்!
x
தினத்தந்தி 26 Jun 2020 7:24 PM GMT (Updated: 26 Jun 2020 7:24 PM GMT)

பா.ஜ.க.வுக்கு கைகொடுத்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்!



மக்களாட்சி தத்துவத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்குவது இந்திய நாட்டு ஜனநாயகம். மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நாட்டை இயக்கும் இருசக்கரங்களைக் கொண்ட நாடாளுமன்ற அமைப்புதான், மக்களவையும், மாநிலங்களவையும். 552 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, இந்தியா முழுவதிலும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகும். மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைப்பெறும் கட்சிதான் ஆட்சியமைக்கும்.

அடுத்து மாநிலங்களவை. இதில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்கள், மாநில சட்டசபைகளில் உள்ள உறுப்பினர்களின் பலத்தை அடிப்படையாக வைத்தும், நியமன அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மக்களவை மூலம் 39 உறுப்பினர்களும், மாநிலங்களவை மூலம் 18 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மக்களவையில் அறுதிப்பெரும்பான்மை கொண்டபா.ஜ.க.வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாதநிலை இருந்து வந்தது. இதனால், கடந்த ஆட்சியின்போதும், இப்போதும் பல மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்தது. நிதி மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலை பெறவேண்டியது இல்லை என்பதால், ஒருசில மசோதாக்கள் பா.ஜ.க. அரசாங்கத்தால் நிதி மசோதாக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு.

மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 90 உறுப்பினர்களே இருந்தார்கள். பல நேரங்களில் அ.தி.மு.க. போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுதான் பெரிய பலமாக இருந்தது. இந்த ஆண்டுக்கு 61 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக் கிறது. ஏற்கனவே 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து 3 தி.மு.க. உறுப்பினர்களும், 2 அ.தி.மு.க. உறுப்பினர்களும், ஒரு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் அடங்குவார்கள்.

கொரோனா காரணமாக 19 உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த61 உறுப்பினர்களில், ஏற்கனவே 17 காங்கிரஸ் உறுப்பினர்கள், 15 பா.ஜ.க. உறுப்பினர்கள் பதவிவகித்து ஓய்வு பெற்றிருந்தனர். இந்தத்தேர்தல் பல விசித்திரங்களை நாட்டுக்கு காண்பித்தது.

காங்கிரசில் நீண்டகால உறுப்பினராக, புகழ்பெற்ற தலைவராக விளங்கிய, மத்தியபிரதேசத்தில் உள்ள ராஜ பரம்பரையை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அந்த கட்சியைவிட்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து பா.ஜ.க. உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவியதால் கூடுதலாக பா.ஜ.க.வுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தது. இந்த தேர்தல் முடிவு பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. 75 உறுப்பினர்களை வைத்திருந்த பா.ஜ.க.வுக்கு இப்போது கூடுதலாக 11 உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 101 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது தனிப்பெரும்பான்மை இல்லை என்றாலும், பா.ஜ.க.வின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அ.தி.மு.க.வுக்கு 9 உறுப்பினர் களும், பிஜூ ஜனதாதள கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 6 உறுப்பினர்கள் மற்றும் பல சிறிய கட்சிகள், நியமன உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என்பதால், இனி பா.ஜ.க.வுக்கு மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு61 இடங்களும் உள்ளன. இந்த தேர்தலில் பல மூத்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, திக் விஜய்சிங், சிபுசோரன், கே.பி.வேணுகோபால், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே.வாசன், திருச்சி சிவா என மூத்த அரசியல்வாதிகளின் நீண்ட பட்டியல் இருப்பதால் விவாதங்களில் சூடுபிடிக்கும், சுவையாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அனுபவம் நல்ல பல ஆலோசனைகளை வழங்கவும் உறுதுணையாக இருக்கும். எனவே, இனி மேல்சபை விவாதங்கள் நிச்சயமாக நாடு உற்றுநோக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story