பெண் போலீஸ் ஏட்டு ரேவதியின் சாட்சியம்!


பெண் போலீஸ் ஏட்டு ரேவதியின் சாட்சியம்!
x
தினத்தந்தி 1 July 2020 11:00 PM GMT (Updated: 1 July 2020 6:16 PM GMT)

அமைதியான ஊராக இருந்த சாத்தான்குளம், போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு எல்லோராலும் பேசப்படும் ஊராகிவிட்டது.

அமைதியான ஊராக இருந்த சாத்தான்குளம், போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு எல்லோராலும் பேசப்படும் ஊராகிவிட்டது. நேற்று முன்தினம் டுவிட்டரில் இந்தியா முழுவதும் அதிகமாக ‘டிரெண்டிங்’ ஆன செய்தி, சாத்தான்குளம் பெண் போலீஸ் ஏட்டு ரேவதி துணிச்சலாக அளித்த வாக்குமூலம்தான். அதுபோல, தமிழ்நாட்டில் அதிகமாக ‘டிரெண்டிங்’ ஆன செய்தி சாத்தான்குளம் சம்பவம்தான். தொடர்ந்து நேற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக ‘டிரெண்டிங்’ ஆன செய்தி ரேவதி பற்றிய செய்திதான். டுவிட்டரில் டிரெண்டிங் என்பது எந்த செய்தி அதிகமாக பதிவு செய்யப்பட்டு, ஏராளமானவர்களால் பகிரப்படுகிறதோ, அதை வைத்துத்தான் டிரெண்டிங் என்று நிர்ணயிப்பார்கள். அந்தவகையில், அகில இந்திய அளவில் பரபரப்பானது, சாத்தான்குளம் பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, ஜெயராஜ்- பென்னிக்ஸ் மீது போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதலையொட்டி, மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலம்தான். ரேவதியை பாராட்டி வெளியிடப்பட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், “நன்றி ரேவதி மேடம். உங்கள் பெயரிலேயே தீ இருக்கிறது. ரேவதீ இருட்டறையிலும் ஒளி பாய்ச்சிய நட்சத்திரம்” என்று கூறப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28-ந்தேதி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பாரதிதாசன் விசாரணை நடத்தும்போது, அங்குள்ள போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர் அளித்த புகாரையொட்டி, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டு, இப்போது வருவாய்த்துறை தாசில்தார், துணை தாசில்தார் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கேரளாவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்றஎன்.சி.அஸ்தானா, “இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த 1861-ம் ஆண்டில் இருந்து இதுவரை, முதன்முறையாக ஒரு போலீஸ் நிலையத்தை மூத்த அதிகாரிகளின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வருவாய்த் துறை எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது அவமானம்” என்று பதிவு செய்துள்ளார். இந்தநிலையில், மீண்டும் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஐகோர்ட்டுக்கு தெரிவித்த தகவலில், தான் விசாரணை நடத்தும்போது, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மிகுந்த அவமதிப்பு நடந்தது என்று தெரிவித்துவிட்டு, யாரும் எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்று பதிவு செய்திருக்கிறார். ஆனால், பெண் போலீஸ் ஏட்டு ரேவதி அளித்த வாக்குமூலத்தில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய, விடிய லத்தியால் அடித்ததாகவும், அதில் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும், அதை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும், அதை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலம்தான் நீதிமன்ற உத்தரவுப்படி, கொலை வழக்காக பதிவு செய்யப்படும் வரை, இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும். “ரேவதியின் வாக்குமூலத்தை குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 164-ன் கீழ் மற்றொரு மாஜிஸ்திரேட்டு சாட்சியமாக பதிவுசெய்ய வேண்டும். ரேவதி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும். அவர் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் முன்பு கொடுத்த வாக்குமூலத்தை மாற்றிச் சொல்வதற்கு தூண்டுதல் முயற்சி ஏற்படும் என்று நாங்கள் கருதுவதால், அவருக்கு உடனடியாக விடுமுறை கொடுக்க வேண்டும்” என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமே ரேவதி, குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 164-ன் கீழ் வேறொரு மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்போகும் வாக்குமூலத்தில்தான் இருக்கிறது. ரேவதி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனிடம் சொன்னதையே மீண்டும் கூறி உறுதிப்படுத்துவாரா? அல்லது வேறு என்ன சொல்லப்போகிறார்? என்பது அவர் அளிக்கப்போகும் சாட்சியத்தில்தான் இருக்கிறது. இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும், எவ்வளவு வலுவுள்ளதாக இருக்கும் என்பதற்கு ரேவதி அளிக்கப்போகும் சாட்சியே முக்கிய காரணமாக அமையப்போகிறது.

Next Story