தொடரட்டும் வேகமான சி.பி.சி.ஐ.டி. விசாரணை!


தொடரட்டும் வேகமான சி.பி.சி.ஐ.டி. விசாரணை!
x
தினத்தந்தி 5 July 2020 10:30 PM GMT (Updated: 5 July 2020 6:12 PM GMT)

சாத்தான்குளத்தில் தந்தை-மகனும், வியாபாரிகளுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்திற்கு மேல், கடையை திறந்துவைத்திருந்தார்கள்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகனும், வியாபாரிகளுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்திற்கு மேல், கடையை திறந்துவைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறிய காரணங்களுக்காக போலீசார் கைது செய்ய வேண்டுமா?. அவர்களை மிருகத்தனமாக தாக்க வேண்டுமா?. அருகில் 28.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையிலோ, 31.1 கி.மீ. தூரத்திலுள்ள திருச்செந்தூர் கிளைச் சிறையிலோ, 45.4 கி.மீ. தூரத்திலுள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ, 54.2 கி.மீ. தூரத்திலுள்ள தூத்துக்குடி சிறையிலோ அடைக்காமல், 107.7 கி.மீ. தூரத்திலுள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்க எப்படி முடிவெடுக்கப்பட்டது?, எப்படி சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு அனுமதித்தார்? என்ற கேள்விகள், மக்கள் மனதில் கோப அலையாக வீசிக்கொண்டிருந்த நேரத்தில், மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாங்களாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது, நீதி தேவதையின் பார்வையில் இந்த சம்பவம் பட்டுவிட்டது, இனி நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, கடந்த மாதம் 29-ந்தேதி அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 30-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு எடுக்கும் வரையில், நீதி கிடைக்க ஒரு நொடிகூட வீணாகக்கூடாது. உடனடியாக சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை சூப்பிரண்டு அனில்குமார் இந்த வழக்கை எடுத்து விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். அனில்குமார் அன்றே விசாரணையை தொடங்கிவிட்டார். ஏற்கனவே, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நடத்திய விசாரணையில், பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, எவ்வாறு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விடிய, விடிய தாக்கப்பட்டார்கள் என்று அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் ஒரு வலுவூட்டும் சாட்சியாக பதிவாகி இருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர், எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் சாத்தான்குளத்திலேயே முகாமிட்டு இந்த வழக்கை விசாரிக்க 12 சிறப்புபடைகள் அமைத்து வேகமாக விசாரணையை நடத்தியது பாராட்டத்தக்கது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவ்வளவு வேகமாக விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய உள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணையே தொடரட்டும் என்ற எண்ணவோட்டம் மக்களிடையே இருக்கிறது.

ஏற்கனவே, கடந்த 30-ந்தேதி விசாரணையின்போது, ஐகோர்ட்டு நீதிபதிகள் இதை தெளிவாக தெரிவித்துவிட்டனர். சி.பி.ஐ. என்பது ஊழல், பொருளாதார மற்றும் மோசடி குற்ற வழக்குகளை விசாரிக்கும் திறமையைக்கொண்டது. சி.பி.ஐ.க்கு மதுரையில்தான் அலுவலகம் இருக்கிறது. மேலும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் சி.பி.ஐ.க்காக ஆஜராக சிறப்பு குற்றவியல் வக்கீல் இல்லை. இந்தநிலையில், சி.பி.சி.ஐ.டி. சரியான வழியில் புலன்விசாரணை நடத்துகிறது என்று திருப்தியடைந்தால், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.

சி.பி.சி.ஐ.டி. இவ்வளவு வேகமாக புலன்விசாரணை செய்து, எல்லா குற்றவாளிகளையும் கைது செய்து, விசாரணையை முடிக்கப்போகும் நிலையில், சி.பி.ஐ. வந்து மீண்டும் வழக்கை நடத்துவது என்பது தேவையா? என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, சி.பி.சி.ஐ.டி.யே, சி.பி.ஐ. விசாரிப்பதுபோல இன்னும் ஆழமாக விசாரித்து, யார்-யாருடைய கவனக்குறைவுகளால் நடந்தது? யாருடைய பணி அலட்சியத்தால் நடந்தது? இந்த விதிமீறல்களுக்கு யார், யார் துணையாக இருந்தார்கள்? என்பதை எல்லாம் தீவிரமாக விசாரித்து அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பதே, நீதி தாமதப்படுத்தக்கூடாது என்று எண்ணுவோரின் கருத்தாக இருக்கிறது.

Next Story