விதிகள் இருக்கின்றன; ஆனால் நிறைவேற்றுவதுதான் இல்லை!


விதிகள் இருக்கின்றன; ஆனால் நிறைவேற்றுவதுதான் இல்லை!
x
தினத்தந்தி 7 July 2020 10:32 PM GMT (Updated: 7 July 2020 10:32 PM GMT)

விதிகள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், பல இடங்களில் நிறைவேற்றுவதுதான் இல்லை.


ராபர்ட் பிரவுனிங் என்ற புகழ்மிக்க இங்கிலாந்து நாட்டு கவிஞர் 1800-ம் ஆண்டுகளில் வாழ்ந்து மறைந்தவர். அவர் எழுதிய பல கவிதைகள், காலத்தால் அழிக்க முடியாதவை என்றாலும், “பேட்ரியாட்“ என்ற கவிதை இன்றளவும் மேற்கோளாக காட்டப்படுகிறது. அதில் நாட்டுப்பற்றுமிக்க ஒருவர், ஒரு ஆண்டுக்கு முன்னால் தனக்கு மக்கள் வீதியெங்கும் ரோஜா இதழ்களை விரித்து வரவேற்று, மலர்கள் தூவியதை குறிப்பிட்டுவிட்டு, அடுத்த ஓராண்டில் தன்னை கற்களால் தாக்கி எதிர்ப்பு தெரிவித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோலத்தான், தமிழக போலீசாரும், வெள்ள நேரத்திலும், முக்கிய குற்றங்களை கண்டுபிடித்த நேரத்திலும், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளிலும் மேற்கொண்ட அயராத பணிகளைக்கண்டு, அவர்களுக்கு மக்கள் புகழ் மலர்களால் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் மறைக்கும் வகையில், சாத்தான்குளம் சம்பவம், தமிழக காவல்துறைக்கே அழிக்கமுடியாத ஒரு கறையை ஏற்படுத்திவிட்டது. இவ்வளவுக்கும் காவல் நிலையங்களில் போலீசார் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என்ற நெறிமுறைகள் இன்றும் இருக்கின்றன. அதெல்லாம் மீறப்பட்டுத்தான் சாத்தான்குளம் சம்பவம் நடந்ததாக, சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜவகர் சந்திரசேகரன், “போலீஸ் துறையின் பெருமை’ என கருதப்படும், மறைந்த டி.ஜி.பி. ஸ்ரீபால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தபோது, லாக்கப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது என்பதில், மிகக்கண்டிப்பாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு, எந்தெந்த வகையில் அந்த நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன என்பதை விளக்கினார். ஒவ்வொரு சரக போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திலும், இரவில் அவர்கள் ஆளுகைக்கு உள்பட்ட காவல் நிலையங்களோடு தொடர்புகொண்டு, எந்தெந்த காவல் நிலையங்களில் லாக்கப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பட்டியல் கேட்பார்கள். என்னென்ன குற்றங்கள் அடிப்படையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர், வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதா? பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுவிட்டதா? என்பதையெல்லாம் கேட்டு, ஏதாவது முக்கிய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என்றால், உதவி கமிஷனரே நேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்று சோதனை இடச்சொல்வது வழக்கம். இதுதவிர, இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளும், போலீஸ் நிலையங்களிலுள்ள லாக்கப்புகளை பார்வையிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் உடலில் ஏதாவது காயம் இருந்தால், உடனடியாக மேல் அதிகாரிகள் சென்று, நடவடிக்கை எடுப்பார்கள். லாக்கப் பற்றிய விவரங்கள் உயர் அதிகாரிகள் வரை கண்டிப்பாக தெரிவிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் போலீஸ் கமிஷனர் ஸ்ரீபாலே போலீஸ் நிலையங்களுக்கு இரவில் சென்று லாக்கப்களை சோதனையிட்டிருக்கிறார். தேவையில்லாத குற்றங்களில், போலீஸ் நிலையத்தில் யாரையாவது விசாரணைக்காக அடைத்து வைத்திருந்தால், மேல் அதிகாரிகளே அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று உத்தரவிடுவதும் உண்டு” என்று கூறினார்.

இது அந்த காலத்திற்கு மட்டுமல்லாமல், இப்போதும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டிய நடைமுறையாகவே இருக்கிறது. இப்போதும், அதுபோன்ற விதிகள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், பல இடங்களில் காலப்போக்கில் மங்கிவிட்டன. இந்த நடைமுறைகள் எல்லாம் முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு சம்பவம் நடந்த அன்று சென்றிருப்பார்கள். மேலும், ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டிலுள்ள தனிப்பிரிவு போலீசார், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல், உளவுப்பிரிவு போலீசார் என உளவுத்தகவல்களை சொல்வதற்கு என தனிப் பிரிவே இருக்கிறது. சாத்தான்குளம் சம்பவத்தைப்பற்றி, அவர்கள் எல்லாம் மேல் அதிகாரிகளுக்கு தக்க நேரத்தில் தகவல் கொடுத்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு நேர்ந்தே இருக்காது. இவ்வாறு பல கோணங்களில் பணி தவறுகள் நடந்திருக்கின்றன என்பதுதான், பொதுவான கருத்தாக இருக்கிறது.


Next Story