திரும்பப்பெற்ற உத்தரவு திருப்தியளிக்கிறது!


திரும்பப்பெற்ற உத்தரவு திருப்தியளிக்கிறது!
x
தினத்தந்தி 8 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-08T23:41:02+05:30)

கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கண்டாக இனிக்க வேண்டும். சுகமான தென்றலில் சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டி பலகைகளை நம்பி, அவர்கள் பயணம் தொடங்கவேண்டும்.

ல்வி என்பது மாணவர்களுக்கு கற்கண்டாக இனிக்க வேண்டும். சுகமான தென்றலில் சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டி பலகைகளை நம்பி, அவர்கள் பயணம் தொடங்கவேண்டும். ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒரு சூறாவளி புயல்போன்று குழப்பமான உத்தரவுகள் மாறிமாறி பிறப்பிக்கப்பட்டதால், எந்த திசையில் செல்வது?, எப்படி செல்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள். முதலில் 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. பிறகு பெற்றோர் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் எழுந்த எதிர்ப்புகளைக்கண்டு, இல்லை.. இல்லை.. பொதுத்தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு நேரத்தில், எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதி பொதுத்தேர்வு என்று முதலிலும், பிறகு ஜூன் 15-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா நேரத்தில் மாணவர்களால் எப்படி தேர்வு எழுத பள்ளிக்கூடம் வரமுடியும்? சமூக இடைவெளிவிட்டு, உட்கார வேண்டிய கட்டாயத்தில் எப்படி தேர்வு மையத்தில் தேர்வு எழுத முடியும்? என்று எழுந்த எதிர்ப்பு குரல்களால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு காரணமாக 24.3.2020 அன்று நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு இறுதிநாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. அவர்களுக்கு 4 மாதங்கள் கழித்து வருகிற 27-ந்தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று இரவு அறிவித்தது. இன்னும் பிளஸ்-2 தேர்வு முடிவு என்று வெளியிடப்படும்? என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தில் தேவையில்லாமல் பல மாறுதல்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் பகுதி-1 என்ற அடிப்படையில் தமிழ் அல்லது தாய்மொழிப் பாடம் இடம்பெறும். பகுதி 2-ல் ஆங்கிலம் இடம்பெறும். பகுதி 3-ல் 4 முதன்மைப் பாடங்களை மாணவர்கள் படிப்பார்கள். எடுத்துக்காட்டாக, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) ஆகிய 4 பாடங்களைப் படித்து வருகிறார்கள். இதுபோல, கலைப்பிரிவில் படிக்கும் மாணவர்களும், தமிழ், ஆங்கிலம் தவிர, 4 பாடங்களைப் படித்துவந்தார்கள். இந்தநிலையில், கல்வித்துறை அடுத்த ஆண்டு முதல், தமிழ், ஆங்கிலம் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். பகுதி 3-ல் மாணவர்கள் 3 முதன்மை பாடங்களை எடுத்துப்படித்தால் போதும். மொத்த மதிப்பெண்ணும் 500 ஆகத்தான் இருக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

நாங்கள் 6 பாடங்களிலும் தேர்வு எழுதுகிறோம் என்று விருப்பப்படும் மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் என்று அறிவித்தாலும், மாணவர்கள் தேர்வு எழுதுவதிலும், உயர் கல்வி தேர்விலும் குழப்பமே ஏற்படும். இது மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். 4 முதன்மை பாடங்களை படித்தவர்களுக்கு உயர் கல்வியில் நிறைய தேர்வு இருக்கும். எடுத்துக்காட்டாக, மருத்துவ கல்லூரிக்கும், பொறியியல் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கலாம் என்பதுபோன்ற பல தேர்வுகள் உயர் கல்வியில் இருக்கிறது. இவ்வாறு ஒரு பாடத்தை குறைத்தால், மாணவர்கள் உயர் கல்வியில், ஏதாவது ஒரு உயர்படிப்பைத்தான் நாடவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இப்போதுள்ள நடைமுறையே நீடிக்கவேண்டும். இதில் மாற்றம் கூடாது என்று எழுந்த எதிர்ப்பின் விளைவாக, இப்போது அரசு இந்த புதிய திட்டத்தை ரத்து செய்துள்ளது. அடிக்கடி மாற்றங்கள் கொண்டுவருவதும், பிறகு ரத்து செய்வதும் என்ற நிலை இனியும் தொடரக்கூடாது. எந்தவொரு முடிவை எடுக்கும் முன்பும், வல்லுனர் குழு, உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களைக் கலந்து ஆலோசித்தே ஒரு தீர்க்கமான, உறுதியான, மாற்றமில்லாத முடிவைக் கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.

Next Story