நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா!


நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா!
x
தினத்தந்தி 10 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-10T22:06:41+05:30)

“நடமாடும் பல்கலைக்கழகம்” என்று தமிழ் கூறும் நல்லுலகில் போற்றி மகிழத்தக்க, நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று.

“நடமாடும் பல்கலைக்கழகம்” என்று தமிழ் கூறும் நல்லுலகில் போற்றி மகிழத்தக்க, நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று.

திராவிடர் இயக்க வரலாற்றில் நாவலர் நெடுஞ்செழியனின் நெடிதுயர்ந்த தோற்றமும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், மடைதிறந்த வெள்ளம்போல் மேடைகளில், அவருக்கே உரிய ஏற்ற இறக்கத்தோடு, அழகு தமிழ்ப்பேசும் ஆற்றலும், இலக்கிய தேன் சொட்டும் எழுத்தும், கண்ணியமிக்க அரசியலும், நிர்வாகத்திறமையும் காலத்தால் அழிக்க முடியாதவை. திராவிடர் இயக்கத்தின் தூணாக விளங்கிய அவர், தந்தை பெரியாரின் தகைசால் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி, திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்க வேண்டும் என்று அண்ணா தலைமையிலான முன்னோடிகள், திருவொற்றியூர் பவளக்கார தெருவிலுள்ள சண்முகம்பிள்ளை வீட்டில் முடிவெடுத்த நேரத்திலும், 18-ந்தேதி ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெயர் அறிவிக்கப்பட்ட நேரத்திலும், அண்ணாவோடு அடுத்த இடத்தில் இருந்தவர்.

அந்த காலக்கட்டங்களில் பட்டித்தொட்டியெல்லாம் பொதுக்கூட்டங்கள் நடத்தி, நாவலர் நெடுஞ்செழியன் தி.மு.க.வின் கொள்கைகளை விளக்கிப்பேசி கட்சியை வளர்த்தார். அப்போது தி.மு.க.வில் தலைவர் பதவிகிடையாது. 1955-ம் ஆண்டு அண்ணாவின் அன்புக்கட்டளையை ஏற்று, ஈ.வே.கி.சம்பத் முன்மொழிய, கலைஞர் உள்பட பலர் வழிமொழிய நாவலர் நெடுஞ்செழியன் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த 2-வது மாநில தி.மு.க. மாநாட்டில் அண்ணா, “தம்பி வா.. தலைமை ஏற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் வா..” என்று கூறியது காலத்தால் அழிக்கமுடியாத பொன் எழுத்துக்களாகும். அண்ணா காலத்திலும், கலைஞர் காலத்திலும், தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிவகித்த நாவலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். காலத்தில் பொதுச்செயலாளராகவும், ஜெயலலிதா காலத்தில் அவைத் தலைவராகவும் அ.தி.மு.க.வில் பொறுப்பு வகித்திருக்கிறார். இந்த 4 தலைவர்களின் அமைச்சரவையிலும், 2-வது இடத்தை வகித்த பெருமைபடைத்தவர். எந்தவொரு கூட்டத்திலும், பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களை சொல்லாமல் அவர் இருந்ததேஇல்லை. “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்ற பாடலையும், “கொலை வாளினை எடடா. மிகு கொடியோர் செயல் அறவே. குகைவாழ் இளம் புலியே. உயர் குணம் மேவிய தமிழா” என்பதுபோன்ற பல பாடல்களை அவர் உணர்ச்சிபொங்க கூறும்போது, கேட்பவர்களின் நாடி, நரம்பெல்லாம் சிலிர்க்கும்.

திராவிடர் இயக்கத்தின் தலைவர்களில், இறுதி மூச்சுவரை பகுத்தறிவு கொள்கையில் உறுதியாக இருந்த சிலரில், நாவலர் முக்கியமானவர். அவரது பேச்சை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும். பல லட்சக்கணக்கில் பொருட்செலவு செய்து ஆடல் பாடல்களோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைக்கூட, 2 மணி நேரம் தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் இடைவேளையில் வெளியே சென்று நிற்கும் தமிழர்கள், நாவலரின் 3 மணி நேர பேச்சை அசையாமல் நின்று கேட்பதுண்டு. எண்ணற்ற நூல்களை அவர் எழுதியிருந்தாலும், “திருக்குறள் தெளிவுரை”, “திராவிடர் இயக்க வரலாறு”, “கண்ணீரும், செந்நீரும் வளர்த்த கழகம்” என்ற நூல்கள், என்றும் படிக்க.. படிக்க.. ஆர்வத்தை ஊட்டுவதாகும்.

நாவலருடைய நினைவை போற்றும் வகையில், அவருக்கு சிலையமைக்க வேண்டும் என்று அவரை போற்றி புகழ்வோர் பலர், மிக ஆசையோடு இருந்த நிலையில், “சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அவரது பிறந்த நாளான ஜூலை 11-ந் தேதி (இன்று) அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு எல்லோரையும் மகிழ்வடைய செய்துள்ளது.

Next Story