துறை ரீதியிலான விசாரணையும் வேண்டும்!


துறை ரீதியிலான விசாரணையும் வேண்டும்!
x
தினத்தந்தி 12 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-12T22:19:44+05:30)

சாத்தான்குளம் சம்பவத்தில், ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. விசாரணை மிகத் தீவிரமாக நடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.

மிழ்நாட்டையே, ஏன் ஒட்டுமொத்த இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சாத்தான்குளம் சம்பவத்தில், ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. விசாரணை மிகத் தீவிரமாக நடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது. சி.பி.ஐ. புலன்விசாரணை முதலில் இருந்து தொடங்கி, கொலை வழக்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, எப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்?, எப்போது வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடங்கப்படும்? என்று உறுதியான ஒரு கால அட்டவணை தெரியாத நிலையில், தமிழக அரசின் மருத்துவத்துறை, துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

மருத்துவத் துறைபோல, இந்த வழக்கில் முறையான பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பதை இதில் தொடர்புடைய காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறைகளும், துறைகள் ரீதியிலான விசாரணை செய்ய வேண்டியநிலை உருவாகியுள்ளது. போலீஸ் நிலையத்தில் ஒருவரை கைது செய்து லாக்கப்பில் அடைக்கும்போது, அவர்கள் உடலில் காயம் இருந்ததா? என்பதை கைதி சோதனை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். இதே தகவல்கள், பொது நாட்குறிப்பு, பாரா புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தனிப்பிரிவு போலீசாரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லும் முன்பு, யாராவது அரசு மருத்துவர் அல்லது பதிவு பெற்ற மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பி சான்றிதழ் பெறவேண்டும். அவர்களை பரிசோதனை செய்யும் டாக்டர், அவர்கள் உடலில் சிறு காயம் இருந்தால், முதலுதவி சிகிச்சை அளிக்கவேண்டும். பெரிய காயங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும்.

இந்தநிலையில், காவல்துறை சார்பில் மாஜிஸ்திரேட்டுக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும். மாஜிஸ்திரேட்டு, நேரடியாக மருத்துவமனைக்கு சென்றோ, அல்லது தன்னிடம் நேரடியாக அழைத்துவரப்பட்டபோதோ, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம், போலீஸ் அடித்தார்களா? உங்கள் உடலில் காயம் இருக்கிறதா? இருந்தால் எப்படி அடிபட்டது? என்பது போன்ற விவரங்களை கேட்டு, இந்த வழக்கு பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் கைது செய்யப்பட்டதை உங்கள் வீட்டில் தெரிவித்துவிட்டார்களா? என்பதையெல்லாம் கேட்டு பதிவுசெய்ய வேண்டும். அதன்பின்பு, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் அங்கும் ஜெயில் அதிகாரி அவர்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும். உடலில் அதிக காயம் இருந்தால் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று விதி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக மருத்துவ சேவைத்துறை விசாரணையை தொடங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் உடல்நிலை தொடர்பாக, அவர்கள் எடுத்த முடிவுகள், என்னென்ன காயங்கள் இருந்தன என்பதை கண்டறிந்தார்கள்? முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா? தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதா? மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்களா? தரமான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பன போன்ற விவரங்கள் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

மருத்துவத்துறை மட்டுமல்லாமல், காவல் துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகிய மற்ற 3 துறைகளும் இதுபோல அந்தந்த துறைகளில் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா? என்பதை கண்டறிய துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. நடத்தப்போகும் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையாக விசாரணை நடந்து, வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

ஆனால், துறை ரீதியிலான விசாரணையில் அந்தந்த பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றினார்களா? என்பதை ஆராய்ந்து, அதில் குறைபாடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். எதிர்காலத்தில் மற்றவர்கள் அந்த குறைகளை செய்யாமல் தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொள்ள இத்தகைய துறை ரீதியிலான விசாரணைகள் உதவியாக இருக்கும். எனவே, குற்றவியல் விசாரணையை சி.பி.ஐ. நடத்தட்டும். துறை ரீதியிலான விசாரணைகளை இந்த 4 துறைகளும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story