ஒருங்கிணைப்பு இல்லாததால் பல பிரச்சினைகள்!


ஒருங்கிணைப்பு இல்லாததால் பல பிரச்சினைகள்!
x
தினத்தந்தி 14 July 2020 4:30 AM IST (Updated: 13 July 2020 10:01 PM IST)
t-max-icont-min-icon

“அலை எப்போது ஓயும். கடலில் இறங்கி எப்போது குளிப்பது?” என்ற நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஒரு குழப்பமான நிலையை சந்திக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

“அலை எப்போது ஓயும். கடலில் இறங்கி எப்போது குளிப்பது?” என்ற நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஒரு குழப்பமான நிலையை சந்திக்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஜூலை மாதம் ஆகிவிட்டது. கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு, அடுத்து என்ன படிப்பில் சேரலாம்? என்று மாணவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய காலம் இது. ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவுகளே இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பால், தற்போது அனைத்து கல்லூரி கட்டிடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்டிடங்களை எல்லாம் அரசு காலி செய்து கொடுத்து, பலமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்பட்டுத்தப்பட்ட பிறகுதான் மாணவர்கள் உள்ளே நுழைய முடியும். இந்த விஷயத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், கல்வி கற்கவரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாது. எப்படி கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து தூய்மையான கட்டிடங்களை அரசு வாங்கியதோ, அதைபோன்று திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விஷயம். இந்தநிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இந்த ஆண்டு நாடு முழுவதிலுமுள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் நடத்தி, செப்டம்பர் 15-ந்தேதி அன்று, முதல் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவேண்டும் என்று முதலில் அறிவித்திருந்தது. இப்போது, இல்லை.. இல்லை.. அக்டோபர் 15-ந்தேதிக்குள் கவுன்சிலிங்கை நடத்தி முடித்து வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை. நாளை அறிவிப்பதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், “நீட்” தேர்வு செப்டம்பர் 13-ந்தேதிக்கு இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுபோல, ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளும் செப்டம்பரில் நடத்தப்படுமா?, அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது கொரோனா பாதிப்பை பொறுத்துத்தான் இருக்கிறது. இப்போதைய கொரோனா பாதிப்பை பார்த்தால் செப்டம்பரில் இந்தத் தேர்வை நடத்த முடியுமா? என்பது சந்தேகமே.

இப்படி, ஒவ்வொரு நுழைவுத்தேர்வும் வெவ்வேறு நேரங்களில் நடந்து, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கினால், பொறியியல் கல்லூரிகளில் படிப்பை தொடங்கிய ஏராளமான மாணவர்கள், மருத்துவ கல்லூரியிலோ, ஐ.ஐ.டி. என்.ஐ.டி.யிலோ இடம் கிடைத்துவிட்டது என்று, வெளியே செல்லும் நிலைமை ஏற்படும். இதனால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய இடங்கள் காலியாக இருக்கும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முழு இடங்களும் நிரம்பாத நிலையில், எல்லா பொறியியல் கல்லூரிகளும் கடுமையான நிதி சிக்கலில் தவிக்கும்போது, இத்தகைய சூழ்நிலையால் மேலும் காலியிடங்கள் ஏற்பட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளை நடத்தவே முடியாத அபாயம் ஏற்படும்.

எனவே, இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ‘நீட்’ தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளை நடத்தும் அமைப்புகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான். ஆக, பொறியியல் கல்லூரிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. மாணவர்களுக்கும் வீணாக சிரமம் ஏற்படக்கூடாது. அவர்களின் பெற்றோருக்கும் பொருளாதார சுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, இந்த 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்தி ஒரே நேரத்தில் மருத்துவ கல்லூரியிலோ, ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யிலோ, பொறியியல் கல்லூரியிலோ சேர விரும்புகிறவர்கள், அதில் போய் சேரும் வகையில் எல்லா படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை ஒரே நேரத்தில் இருக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

Next Story