காற்றில் பரவுகிறதா கொரோனா?!


காற்றில் பரவுகிறதா கொரோனா?!
x
தினத்தந்தி 14 July 2020 10:32 PM GMT (Updated: 14 July 2020 10:32 PM GMT)

யாருமே எதிர்பார்க்காத வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தலையெடுத்த கொரோனா தொற்று, இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. இந்தப்பரவல் 7 மாதங்களாகியும் குறைந்தபாடில்லை.

 உகான் நகரில் இருந்து வந்தவர்களால்தான், ஜனவரி 30-ந்தேதி இந்தியாவில் முதலாவதாக கேரளாவில் கொரோனா தொற்று காலெடுத்து வைத்தது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மார்ச் 7-ந்தேதிதான் மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவர் மூலம் கொரோனா காலூன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கி, நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என்று, இப்போது ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு மேல் தமிழ்நாட்டில் பரவியிருக்கிறது.

இதுவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தும்மினாலோ, இருமினாலோ அருகில் உள்ளவர்களுக்கு பரவும் என்றும், அல்லது அவர்கள் தொட்ட பொருளை பிறர் தொடுவதாலோ பரவும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த 6-ந்தேதி 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலகச் சுகாதார நிறுவனத்துக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார்கள். அதில், கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவுவது என்று கூறுவதற்கு தங்களிடம் போதுமான ஆதாரம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுவிடும் போதோ, தும்மும்போதோ, பேசும்போதோ வெளியேறும் சளி, எச்சில் போன்றவை துகள்களாக காற்றில் கலந்து, 3 முதல் 6 அடி வரை தூரத்தில் செல்லும் ஒருவருக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஒரே அறையில் இருப்பவர்களுக்குக்கூட இப்படி பரவ முடியும்.

இந்த சளி, எச்சில் போன்றவை 5 மைக்ரான் அளவுக்கு குறைவாகத்தான் இருக்கும். ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். நமது தலை முடியின் அகலமே 60 முதல் 120 மைக்ரான்தான். இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிடும் போதும், சிரிக்கும்போதும், பாடும்போதும்கூட வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வெளியே வரும் சிறு துகள்களான சளி, எச்சில் போன்றவை காற்றில் கலந்து தரையில் படிய வெகுநேரமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக சீனாவிலுள்ள உகான் நகரில் இருந்து புறப்பட்டு சென்ற ஒருவர், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு உணவகத்தில், தனது குடும்பத்தினருடன் உணவருந்தி இருக்கிறார். அப்போது அவர்களுடன் தொடர்பு இல்லாமல் 15 அடி இடைவெளியில் உணவருந்திய 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேபோல, அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியில் தனி நபர் இடைவெளி எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு, எல்லோருமே சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி அமர்ந்திருக்கிறார்கள். அதில் பங்கேற்ற 61 பேரில் ஒருவருக்கு மட்டும் லேசான இருமல் இருந்துள்ளது. ஆனால், அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 2 சம்பவங்களிலும், காற்றின் மூலம் தான் கொரோனா பரவியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காற்றில் 3 மணி நேரம் இந்த சளி, எச்சில் துகள்கள் மிதந்து கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், காற்றின் மூலம்தான் பரவுகிறது என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் அவசரமாக தேவை என்று கூறியுள்ளது. இப்போதைக்கு ஒரே தீர்வு முககவசம் அணிவதுதான். மற்றவர்கள் இருக்கும் அனைத்து உள் அரங்குகளிலும் எல்லோரும் முககவசம் அணிந்திருக்கவேண்டும். பொதுக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

போதுமான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில் காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பதை ஒரு வதந்தியாக எடுத்துக்கொள்ளாமல், 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் சொன்ன கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, உலக சுகாதார நிறுவனம் இதை தீவிரமாக ஆராய்ச்சி செய்து, உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

Next Story