வரி பிடித்தம் செய்ய இதுவா நேரம்?


வரி பிடித்தம் செய்ய இதுவா நேரம்?
x
தினத்தந்தி 15 July 2020 11:19 PM GMT (Updated: 15 July 2020 11:19 PM GMT)

கடந்த 5 மாதங்களாக, ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மக்கள், தங்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்பும், விலைவாசி உயர்வும் அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 5 மாதங்களாக, ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மக்கள், தங்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்பும், விலைவாசி உயர்வும் அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், வருமான வரித்துறை (மத்திய நேரடி வரி வாரியம்) திடீரென ஒரு வரிப்பிடித்த (டி.டி.எஸ்.) அறிவிப்பை வெளியிட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை நடத்த வரி வருவாய் நிச்சயம் தேவை. பண்டைய காலங்களில் இருந்தே வெவ்வேறு பெயர்களில் வரி வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது. கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர்கூட, ஒரு பூவில் இருந்து வண்டு எவ்வாறு தேனை உறிஞ்சுகிறதோ, அதுபோல மக்களுக்கு வலியில்லாமல் மன்னர்கள் வரி வசூலிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் மக்கள் ஏற்கனவே வருமான வரி, சொத்து வரி, சரக்குசேவை வரி, குடிநீர் வரி, சுங்க வரி என்று பல்வேறு பெயர்களில் உள்ள வரிகளுக்கு, ஈட்டிய வருமானத்தில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டியநிலை இருக்கிறது. இந்தநிலையில், வருமான வரித்துறை, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும், மக்கள் சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து ரொக்கமாக எடுக்கும் பணத்திற்கு வரிப்பிடித்தம் செய்யும் சம்மட்டி அடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, வருமான வரி கட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்குமேல் பணத்தை ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரிப்பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் எடுத்தால், 2 சதவீத வரிப்பிடித்தமும், ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 5 சதவீதம் வரிப்பிடித்தமும் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

பொதுவாக மக்கள், அதுவும் குறிப்பாக கிராமப்புற மக்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்வோர், வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மொத்தமாக ரூ.20 லட்சம் பணத்தை கொண்டுபோய் போட்டுவிடுவதில்லை. ஆண்டுக்கணக்கில் கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தை பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமண செலவிற்கோ, வீடு வாங்கவோ, விவசாய பணிகளை மேற்கொள்ளவோ, தொழில் நடத்தவோ, தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கவோ, அவசர மருத்துவ சிகிச்சைக்கோ என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுப்பார்கள். அப்படி எடுக்கும் பணம் ரூ.20 லட்சத்திற்கு மேல் வந்துவிட்டால், உடனே வரிப்பிடித்தம் என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அதுவும் இந்த கொரோனா பாதிப்பு நேரத்தில், விலைவாசி, மருந்து பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், அதிக பணத்தேவைக்காக தங்கள் சேமிப்பில் இருந்து கூடுதலாக பணம் எடுத்துக்கொண்டிருக்கும் காலம் இது. இந்தநேரத்தில் பெரும்பாலான வருமான வரி கட்டுபவர்கள், அதிலும் குறிப்பாக மாதச்சம்பளம் பெறுவோர், 2, 3 ஆண்டுகள் வருமான வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய நேரத்தில், இவ்வாறு மேலும் அவர்கள் தலையில் சுமையை ஏற்றுவது சரியல்ல. எனவே, மத்திய அரசாங்கம் இதை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

உழைத்து சம்பாதித்த வருமானத்திற்கு, வருமான வரி கட்டி சிக்கனமாக வாழ்ந்து டெபாசிட்டுகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டிக்கும் மீண்டும் வருமான வரியா? என்ற வலி மக்களிடம் இருக்கிறது. மேலும், வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்புகளில் இருந்து பணம் எடுப்பதற்கு வரிப்பிடித்தம் செய்தால், அரசின் வேண்டுகோளை ஏற்று ‘டிஜிட்டல்‘ பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் செல்வது முற்றிலுமாக நின்றுவிடும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பணத்தைபோட்டு எடுத்தால்தானே இப்படி வரிப்பிடித்தம் செய்வார்கள் என்று, மக்கள் அங்கு பணத்தை சேமிக்காமல் வேறு பாதைக்கும் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற நிலையில், இந்த புது அறிவிப்பு தேவையில்லை என்பதுதான் எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது. 

Next Story