மாணவர்களின் உயிரா? தேர்வா?


மாணவர்களின் உயிரா? தேர்வா?
x
தினத்தந்தி 20 July 2020 11:15 PM GMT (Updated: 2020-07-21T04:45:08+05:30)

கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. எல்லா பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்டன.

டந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. எல்லா பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்டன. 10-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வு இன்னும் நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்தத் தேர்வை நடத்தலாமா?, நடத்தாமலேயே அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிடலாமா? என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குகாட் கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில், பல்கலைக்கழக மானியக்குழு இறுதி செமஸ்டர் தேர்வை மட்டுமல்லாமல், நிலுவையிலுள்ள மற்ற செமஸ்டர் தேர்வுகளையும், ஆன்லைன் மூலமாகவோ, மாணவர்களை நேரில் வரச்செய்தோ நடத்தலாம் என்று முடிவெடுத்து, அதற்கு மத்திய அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது இந்தத் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, டெல்லி அரசாங்கம் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டது. பஞ்சாப், மராட்டியம், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள், தாங்கள் இந்த தேர்வுகளை நடத்த விரும்பவில்லை என்று மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச அரசாங்கம் முதலில் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள் வந்தபிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களும் டெல்லியைப்போல ரத்து செய்திருக்கின்றன.

இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வை செப்டம்பர் மாதம் நடத்துவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்கூறி, இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் விஷயம் குறித்து முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும் என்ற அர்த்தமுள்ள ஒரு கடிதத்தை எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதில் அவர் கூறியுள்ள காரணங்கள், மத்திய அரசாங்கத்தால் நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டும். மாநிலத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் வகுப்பறைகள் மற்றும் விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து கொரோனா சிகிச்சை மையங்களாக தொடரவேண்டிய நிலை உள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கிறார். ‘ஆன்லைன்’ மூலம் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களுக்கு நிச்சயமாக இருக்காது, என்றைக்கு நேரில் வந்து எழுதக்கூடிய சூழ்நிலை இருக்கிறதோ, அன்றுதான் அவர்களால் தேர்வு எழுத முடியும்.

இந்தநிலையில், பல்கலைக்கழக மானியக்குழு, “தாங்கள் அளிக்கும் வழிமுறைகளை மாநில அரசாங்கங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. ஆனால், “பல்கலைக்கழக மானியக்குழு இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, எல்லோரையும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தில் இருக்கிறது. என்றாலும், இப்படி எந்த கலந்தாலோசனையும் நடைபெறவில்லை” என்று இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோல், “பள்ளிக்கூட கல்விதான் மாநிலப் பட்டியலில் இருக்கிறது. உயர் கல்வி மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுதான் பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தில் இருக்கிறது” என்று மத்திய அரசாங்க உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே கூறியிருப்பது, இப்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நிச்சயமாக ஏற்புடையதல்ல. மாணவர்களின் உயிரா? தேர்வா? என்று பார்த்தால் உயிர்தான் முக்கியம். எனவே, கொரோனா நீடித்தால் தேர்வுகளை தள்ளிவைக்கவோ, ரத்து செய்யவோ மாநில அரசுகளின் முடிவுக்கே மத்திய அரசாங்கம் விட்டுவிட வேண்டும்.

Next Story