பாராட்ட வேண்டிய சரியான முடிவு!


பாராட்ட வேண்டிய சரியான முடிவு!
x
தினத்தந்தி 23 July 2020 10:00 PM GMT (Updated: 2020-07-24T00:38:09+05:30)

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கலை-அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டிடங்கள், மாணவர்கள் விடுதிகள் எல்லாம் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பு சென்னையில் மட்டும் அதிகமாக இருந்தநிலையில், தற்போது மற்ற மாவட்டங்களில், குக்கிராமங்களில்கூட கொரோனாவின் கொடிய கரம் நீண்டுவிட்டது.

இந்தநிலையில், கலை-அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டிடங்கள், மாணவர்கள் விடுதிகள் எல்லாம் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. எப்போது கொரோனா பாதிப்பு ஒழியும்? இந்தக் கட்டிடங்களை எல்லாம் நன்றாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி, கல்லூரி நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைப்பது என்ற நிச்சயமான நிலையே இன்னும் இல்லாத வேளையில், பல்கலைக்கழக மானியக்குழு, பல்கலைக்கழக இறுதித்தேர்வை மட்டுமல்லாமல், நிலுவையிலுள்ள மற்ற செமஸ்டர் தேர்வுகளையும் ‘ஆன்லைன்’ மூலமாகவோ, மாணவர்களை நேரில் வரச் செய்தோ, செப்டம்பர் மாத இறுதியில் நடத்தவேண்டும் என்று அறிவித்திருந்தது.

பல மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “செமஸ்டர் தேர்வை நடத்தும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்“ என்று கடிதம் எழுதியிருந்தார். 3 நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’யில் கூட “மாணவர்களின் உயிரா? தேர்வா?“ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மிக அர்த்தமுள்ள ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்.சி.ஏ. படிப்பில் முதலாம் மற்றும் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிட்டு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் உயிரா? தேர்வா? என்ற வினாவுக்கு, “மாணவர்களின் உயிர்தான் தமிழக அரசுக்கு முக்கியம், தேர்வு அல்ல“ என்ற துணிச்சலான முடிவை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும், செயலாளர் அபூர்வாவும் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்.

இதுபோல, மாநிலங்களிலுள்ள பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது? ஆகஸ்டா? செப்டம்பரா? அக்டோபரா? என்று பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு, மாநில அரசுகள் அறிக்கை தர வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது.

நாடு முழுவதும் உள்ள 25 கோடிக்கு மேற்பட்ட இளம்சிறார்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஏற்கனவே நடந்த ஒரு ஆய்வில் 10 வயது முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், பெரியவர்கள் எந்த அளவுக்கு கொரோனாவை பரவச் செய்ய முடியுமோ? அந்த அளவுக்கு பரவச்செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில், இப்போது பள்ளிக்கூடங்களை திறந்து, அறிகுறி இல்லாமல் ஒரு மாணவர் உள்ளே வந்தாலும், அது மற்றவர்களுக்கும் வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களையும் முககவசம் அணிந்துகொண்டுவர கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தாலும், சமூக இடைவெளிக்கு பள்ளிக்கூடங்களில் நிச்சயமாக இடம் இருக்காது. எனவே, கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வில் உயர் கல்வித்துறை நல்ல முடிவை எடுத்ததுபோல, பள்ளிக்கூடங்களை திறக்கும் விஷயத்திலும், பள்ளி கல்வித்துறை ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். முதலில், கொரோனாவை விரட்டுவோம். அதன்பிறகு, பள்ளி -கல்லூரிகளை திறப்போம் என்பதுதான் பெற்றோர்களின் உறுதிப்பாடான நிலையாக இருக்கிறது.

Next Story