திரும்பி வரட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!


திரும்பி வரட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
x
தினத்தந்தி 26 July 2020 8:28 PM GMT (Updated: 2020-07-27T01:58:26+05:30)

எப்படி தமிழ்நாட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான தொழிலாளர்கள் அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றார்களோ, அதேபோல இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ப்படி தமிழ்நாட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான தொழிலாளர்கள் அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றார்களோ, அதேபோல இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஏராளமான வடநாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் ஒரு பையுடன், “தமிழ்நாடு நம்மை கைவிடாது, வாழ வைக்கும்“ என்ற நம்பிக்கையுடன், அலை அலையாய் தினமும் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் கட்டிட வேலை, மின்சார வேலை, மொசைக் பதிக்கும் வேலை, தச்சு வேலை, பிளம்பர் வேலை, காவலர்கள் வேலை என்று தொடங்கி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள், ஏன் சிறு சிறு கடைகளில்கூட வேலைக்கு அமர்ந்துள்ள காட்சியை தமிழ்நாடு கண்டது.

விவசாய வேலைகள் தவிர, மற்றப்படி அடிப்படை வேலைகள் அனைத்திலும் சென்னை மட்டுமல்லாமல் மாவட்டங்களிலுள்ள நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல், கிராமங்கள் வரை சென்று பணியாற்றத் தொடங்கினர். ஆண்களும், பெண்களுமாக லட்சக்கணக்கில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த அவர்கள், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடன் பயந்துபோய் ஊர் திரும்பினார்கள். தொடக்க கால கட்டங்களில், நடந்தோ, சைக்கிள்களிலோ, இருசக்கர வாகனங்களிலோ, பஸ் லாரிகளிலோ சென்ற அவர்கள், ‘இபாஸ்’ கட்டாயம் வேண்டும் என்றநிலை வந்தவுடன், எப்படி செல்வது? என்று தெரியாமல் திகைத்தார்கள். அவர்களுக்காக புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கியது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை போன்ற பல நகரங்களில் இருந்து 259 சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், அசாம் போன்ற பல மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள், மேலும் பல காரணங்களால் வந்து ஊருக்கு செல்ல முடியாமல் திரும்பியவர்கள் என்ற வகையில், 3 லட்சத்து 79 ஆயிரத்து 290 பேர் திரும்பிச் சென்றனர்.

சொந்த ஊரில், தொடக்க நாட்களில் கையில் இருந்த பணத்தை செலவழித்த அவர்கள், அதற்குப் பிறகு அங்கேயும் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் மிகுந்த கஷ்டத்தை அடைந்து, “தமிழ்நாட்டுக்கு சென்றால், நன்றாக இருக்குமே. தமிழகம் வளமாக வாழ வைத்ததே” என்ற நிலையில், சிலர் பல்வேறு இன்னல்களைத்தாண்டி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்தத் தொழிலாளர்கள் இல்லாமல், பல்வேறு தொழில்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கிவிட்டன. சென்னை மெட்ரோ ரெயில் பணிகள்கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாததால், அப்படியே நின்றுபோன நிலையில், இப்போது ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து பஸ்கள் மூலமாக ஏறத்தாழ 500 தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து, வேலைகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல, மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தாராளமாக ‘இபாஸ்’ வழங்கவும் அவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு சிறப்பு ரெயில்கள் விடலாமா? சிறப்பு பஸ்கள் விடலாமா? என்பதை மத்திய, மாநில அரசாங்கங்கள் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மீண்டும் தமிழ்நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால், கொரோனா மீண்டும் பெருமளவில் இறக்குமதி ஆகிவிட முடியாத நிலையை ஏற்படுத்த ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்யவும், 14 நாட்கள் தனிமைப்படுத்திய பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவும், தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் தொழில்வர்த்தக வளர்ச்சிக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேண்டும். அதேநேரத்தில், அவர்கள் கொரோனாவையும் கொண்டுவந்துவிடக்கூடாது. 

Next Story