கொரோனா பரிசோதனை இன்னும் ஏராளம் தேவை!


கொரோனா பரிசோதனை இன்னும் ஏராளம் தேவை!
x
தினத்தந்தி 27 July 2020 8:03 PM GMT (Updated: 27 July 2020 8:03 PM GMT)

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக நடந்தாலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் குதிரை பாய்ச்சலில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக நடந்தாலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் குதிரை பாய்ச்சலில் அதிகரித்துக் கொண்டே போகிறது. மார்ச் 7-ந்தேதி மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவரால் இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா, நேற்று வரையில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் நேற்று கணக்குப்படி, ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று தொடங்கி, நேற்று மட்டும் 61,342 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், சென்னையில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, மாவட்டங்களில், ஏன் சிறிய கிராமங்களில்கூட கொரோனா பாதிப்பு இருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்குவரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அது பயன்பாட்டுக்குவந்து அனைவருக்கும் தடுப்பூசி போட்டுமுடிக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் நிச்சயம் ஆகும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஆக, கொரோனாவை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால், தடுப்பூசி போடப்பட்ட பிறகுதான் முடியும் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து, அவர்களால் மற்றவர்களுக்கு பரவும் முன்பு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட்டால், பரவலை வெகுவாகத் தடுக்க முடியும்.

இந்தநிலையில், சோதனை எண்ணிக்கையை மிக அதிகளவில், உயர்த்த வேண்டும் என்பது, அவசர அவசியமாகிவிட்டது. மூக்கிலும், தொண்டையிலும் சளி மாதிரியை எடுத்து, பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். சோதனையால் மட்டும் இது நிச்சயம் முடியாது. ஏனெனில், இதற்கான பரிசோதனை கூடங்கள் தற்போது 117 தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரே நேரத்தில், 8 மாதிரிகளை மட்டுமே சோதனை செய்ய முடியும். சோதனை செய்து முடிக்க 8 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டுபிடிக்க குழு பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டும் பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்கு பதிலாக 5 பேருக்கு மொத்தமாக பரிசோதனை செய்வது என்றும், அதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தால், 5 பேருக்கும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். கொரோனா தொற்று இருக்கிறது என்று முடிவு வந்தால், மீண்டும் 5 பேருக்கும் தனித்தனியாக பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோல, “சீரோ சர்வைலன்ஸ்” என்ற முறையையும் பின்பற்ற இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் உடலில் “ஆன்ட்டி பாடி” என்ற நோய் எதிர்ப்பு தன்மை உருவாகியிருக்கிறதா? என்பதை கையில் இருந்து ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யும் முறையாகும். இதன் மூலம் ஓரிரு மணி நேரத்தில் முடிவை தெரிந்துகொள்ளலாம். “ஆன்டி பாடி” இல்லை என்றால் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, ஒரு பக்கம் பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில், இன்னும் ஏராளமான சோதனைக்கூடங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். மறுபக்கம் குழு பரிசோதனை, “சீரோ சர்வைலன்ஸ்”, இதேபோல ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்யும் “ஆன்டிஜன்” ஆகிய சோதனைகளை பெரும்பாலான மக்களுக்கு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதன் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா தொற்றை முழுமையாக விரட்டும் முன்பு பரவலை பெருமளவில் தவிர்த்துவிட்டாலே, கொரோனா பயத்தில் இருந்து மக்கள் விடுபட முடியும். இதற்கான முயற்சிகளை மிகவும் விரைவுபடுத்த வேண்டும் என்பதே, சகஜ வாழ்க்கைக்கு திரும்ப ஏங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பயத்தில் உள்ள மக்களின் கோரிக்கையாகும்.

Next Story