பல கதவுகளைத் தட்டினால் ஒரு வழி திறக்கும்!


பல கதவுகளைத் தட்டினால் ஒரு வழி திறக்கும்!
x
தினத்தந்தி 29 July 2020 9:13 PM GMT (Updated: 29 July 2020 9:13 PM GMT)

கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை “நீட்” தேர்வு மூலமே நடத்தப்படும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

டந்த 3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை “நீட்” தேர்வு மூலமே நடத்தப்படும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். “நீட்” தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து தயாரிக்கப்படும் கேள்விகளாக இருப்பதால், தமிழக கல்வித் திட்டத்தின்கீழ் படிக்கும் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரவே முடியவில்லை. ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், எதிர்காலத்தில் டாக்டர்களாக முடியவே முடியாதா? என்ற கவலை மாணவர்கள் சமுதாயத்தில் இருக்கிறது.

நல்ல வேளையாக, அரசு “நீட்” தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் 7.5 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களாக இருக்கவேண்டும் என்று உள்ஒதுக்கீடு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு “நீட்” தேர்வு கொரோனா பாதிப்பால், முதலில் மே 3-ந்தேதி, பிறகு ஜூலை 26-ந்தேதி என்று ஒத்திவைக்கப்பட்டு, இப்போது செப்டம்பர் 13-ந்தேதி நடத்தப்போவதாக கூறியிருக்கிறது. கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் செப்டம்பர் 13-ந்தேதி “நீட்” தேர்வு நடத்த முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி.

இந்தநிலையில், இந்த ஆண்டு “நீட்” தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று, ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த 27-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற வகையில், உடனடியாக அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும்” என்றுகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி தமிழக சட்டசபையில், தமிழ்நாட்டில் “நீட்” தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், செப்டம்பர் 18-ந்தேதி அந்த மசோதாக்களை ஜனாதிபதி நிறுத்திவைத்துள்ளதாக மத்திய அரசாங்க உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு தெரிவித்து திருப்பி அனுப்பியது. என்ன காரணத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு தெரிவிக்காதநிலையில், காரணத்தை தெரிவிக்கக்கோரி, தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை.

காரணத்தை தெரிவித்தால்தான் மீண்டும் சட்டசபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். எனவே, என்ன காரணத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டது? என்று மத்திய அரசாங்கத்தை இன்னும் தமிழக அரசு அழுத்தமாக கேட்கவேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியை நேரில் சந்தித்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவேண்டும். நாடாளுமன்ற கூட்டத்திலும் நமது எம்.பி.க்களின் குரல் இதற்காக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது பல்வேறு கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. “நீட்” தேர்வு தொடர்பான பல்வேறு விதிகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, எனவே சட்டப்படி செல்லாது என்று உத்தரவிடக்கோரி கடந்த ஜனவரி 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒரு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கையும் தமிழக அரசு மீண்டும் விரைவுபடுத்த வேண்டும். “இந்த வழக்கிலுள்ள ஆவணங்களில் சில குறைபாடுகள் உள்ளன, சரிசெய்து அனுப்புங்கள்” என்று சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் திரும்ப அனுப்பியதை தொடர்ந்து, அதன் அடிப்படையில் சரிசெய்து திரும்ப அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை தமிழக அரசு தெரிவித்து, செப்டம்பர் மாதத்திற்கு முன்பே இந்த வழக்கை விரைவுபடுத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெறுவது மேலும் ஒரு வழியாகும். எனவே, உடனடியாக அரசு சார்பில், அரசியல் கட்சிகள் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், “நீட்” தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து கதவுகளையும் தட்டவேண்டும். ஏதாவது ஒரு கதவு திறந்தால் நிச்சயமாக வழிபிறக்கும். 

Next Story