சாத்தியமாகுமா புதிய கல்விக் கொள்கை?


சாத்தியமாகுமா புதிய கல்விக் கொள்கை?
x
தினத்தந்தி 31 July 2020 11:28 PM GMT (Updated: 1 Aug 2020 1:37 AM GMT)

34 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு பாராட்டும் கிடைத்திருக்கிறது, மாநில உரிமையை பறித்துவிட்டது, மொழித்திணிப்பை தொடங்கிவிட்டது என்ற விமர்சனங்களும் வெளிவருகிறது.

34 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு பாராட்டும் கிடைத்திருக்கிறது, மாநில உரிமையை பறித்துவிட்டது, மொழித்திணிப்பை தொடங்கிவிட்டது என்ற விமர்சனங்களும் வெளிவருகிறது. காலம் மாறிவருகிறது, அதற்கேற்ப கல்வித்திட்டங்கள் மாற்றப்படவேண்டும். தற்போது, நடைமுறையிலுள்ள கல்விக்கொள்கை 1986-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உருவாக்கிய கல்விக் கொள்கையின் நகல், 2018-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டு பொது கருத்துகள் கேட்கப்பட்டு, இப்போது புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

நகல் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டபோது, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருந்தது. அது இப்போது இல்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் மும்மொழி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த மொழி திணிப்பும் இருக்காது, ஆனால் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்று சொல்வதுதான், இது இந்தி திணிப்புக்கு மறைமுக முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. பள்ளிக்கூட கல்வியிலும், உயர் கல்வியிலும் சமஸ்கிருதம் விருப்பப்பாடமாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் கொள்கையே இருமொழி கல்வி என்பதுதான். அந்த வகையில், மும்மொழி கல்வியை எப்படி ஏற்கும்? என்று தெரியவில்லை. மேலும் 3-வது மொழியாக இந்திய மொழி என்பதைத் தாண்டி வெளிநாட்டு மொழியையும் படிக்கலாம் என்றிருந்தால், வெளிநாட்டு வேலை என்பது எளிதாக கிடைக்கும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வே வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில், 2022-ம் கல்வியாண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று கூறுவது சரியாக இருக்குமா? என்பதுதான் எல்லோருடைய மனதிலும் தோன்றும் எண்ணமாகும். எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம் பாடமொழி 5-ம் வகுப்புவரை தாய்மொழியில் இருக்கவேண்டும், 8-ம் வகுப்புவரை இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல், தொழில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. இப்போதுள்ள பள்ளிக்கூட கல்வி முறையில், 6 வயது முதல் 16 வயது வரை, 1 முதல் 10-ம் வகுப்புவரையும், 16 முதல் 18 வயதுவரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் வரையும் படிக்கலாம் என்று வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய கல்விக்கொள்கைப்படி, 3 வயது முதல், முதல் 5 வகுப்புகள் (1-ம் வகுப்புக்கு முந்தைய 3 மழலை வகுப்புகள் அல்லது அங்கன்வாடி) மற்றும் முதல் 2 வகுப்புகள் அடிப்படை கல்வி என்றும், 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை தொடக்கக்கல்வி என்றும், 6 முதல் 8-ம் வகுப்புவரை நடுநிலைக்கல்வி என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர்நிலைக்கல்வி என்றும் 18 வயது வரை 15 வகுப்புகளுக்கு வகுக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கல்வியில் 3 மற்றும் 4 ஆண்டு பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களோடு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கல்லூரிகளே பட்டம் வழங்கும் சுயாட்சி வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பில் 4 ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் என்று தனித்தனியாக இருக்கும் அமைப்புகளுக்கு பதிலாக ஒரே உயர் கல்வி ஆணையம், மருத்துவம், சட்டக் கல்லூரிகளைத்தவிர, மற்ற அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து அதன்கீழ் கொண்டுவரும் அறிவிப்பு நிச்சயம் வரவேற்புக்குரியது. மொத்தத்தில் சாதகம், பாதகம் இரண்டும் கலந்த கலவையாக புதிய கல்விக்கொள்கை இருக்கிறது. கல்வி என்பது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கட்டுப்பாட்டில் என தனித்தனியாக இல்லாமல், பொதுப்பட்டியலில் இருப்பதால் இதை தமிழக அரசு முழுமையாக ஆராய்ந்து, எந்தெந்த கொள்கை தங்களுக்கு ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை மத்திய அரசாங்கத்திற்கு தெளிவாக, வெளிப்படையாக தெரிவித்துவிடவேண்டும்.

Next Story