அயோத்தியில் ராமர் கோவில்!


அயோத்தியில் ராமர் கோவில்!
x
தினத்தந்தி 4 Aug 2020 9:26 PM GMT (Updated: 2020-08-05T02:56:45+05:30)

“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்பற்கு ஏற்ப, ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நடந்துவந்த ஒரு சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில், இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெறுகிறது.

“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்பற்கு ஏற்ப, ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நடந்துவந்த ஒரு சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில், இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெறுகிறது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 1528-ம்ஆண்டு பாபர் ஒரு மசூதியை கட்டினார் என்பது இந்துக்களின் வாதம். இதைத்தொடர்ந்து 1885-ம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு ராமர் கோவில் கட்டவேண்டும் என்று மகந்த் ரக்பிர்தாஸ் என்பவர் பைசாபாத் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். அன்று தொடங்கிய சட்டப்போராட்டத்திற்கு 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புதான் ஒரு முடிவைத் தந்தது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில்கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அயோத்தியாவில் ஒரு முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இந்தத்தீர்ப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டு, அதன்பிறகு எந்தவித சர்ச்சைகளும் இடம்பெறவில்லை என்பதோடு, ‘இதுதான் இந்தியா, இந்த நந்தவனத்தில் மதநல்லிணக்கம் என்னும் மலர் எப்போதும் பூத்துக்குலுங்கும்’ என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

இந்தநிலையில், ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று பூமிபூஜை நடக்கிறது.

அதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக ராமர்கோவிலில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சன்னிவக்பு வாரியத்திடம் வழங்கப்பட்டது. இன்று நடக்கும் பூமிபூஜையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள மொத்தம் 175 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மடங்கள், கோவில்களில் இருந்து 135 மதகுருக்கள், மடாதிபதிகள், மதத்தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். நாடு முழுவதிலும் இருந்து புனித தண்ணீர் மற்றும் புனித மணல் பூமிபூஜைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ராமேசுவரத்திலிருந்து புனித தீர்த்தம் மற்றும் புனித மணலும், காஞ்சீபுரம் சங்கர மடத்தில் இருந்து பூஜை பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. அதேப்போல, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரம் செங்கல்கள் பூஜை செய்து வழங்கப்பட்டுள்ளதாக விஸ்வஇந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுதவிர மேலும் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீராம் என்று தமிழில் எழுதப்பட்ட 5 கிலோ எடையுள்ள தங்க செங்கலும், 20 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கலும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தவிழாவின் மற்றொரு முக்கிய அம்சம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்று முதன்முதலில் ஹஷிம் அன்சாரி என்பவர்தான் வழக்கு தொடர்ந்தார். 2016-ம்ஆண்டு தன் 95-வது வயதில் அவர் இறந்தவுடன், அவரது மகன் இக்பால் அன்சாரி வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இப்போது இக்பால் அன்சாரிக்கு இந்த பூமிபூஜையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. “நான் இந்த பூமிபூஜையில் பங்கேற்கவேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பமாகும். கோர்ட்டு தீர்ப்புக்குப்பிறகு இந்த நிலத்துக்குரிய தகராறு முடிந்துவிட்டது. நான் விழாவில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், ராமர் பெயர் எழுதப்பட்ட மேல் அங்கி ஒன்றையும், ராம்சரித் மானஸ் (ராமரின் பெருமைகளை விளக்கும் காவியம்) என்ற ராமகாவியத்தையும் பிரதமருக்கு பரிசளிக்க விரும்புகிறேன். மதத்தின் அடிப்படையிலான சண்டைகள் இதோடு முடிந்துவிடவேண்டும்” என்று அவர் கூறியிருப்பது, இந்தியாவில் மதநல்லிணக்கத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் பெயரால் ஒரேயொரு கருத்து மாறுபாடு இதுவரையில் இந்தியாவில் இருந்தது.

இக்பால் அன்சாரி சொன்னதுபோல, இன்றோடு அதுமுடிந்து, மதரீதியான கருத்து வேறுபாடுகள் இல்லாத புதிய இந்தியா இன்று பிறக்கட்டும்.

Next Story