செமஸ்டர் தேர்வு கட்டணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்!


செமஸ்டர் தேர்வு கட்டணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்!
x
தினத்தந்தி 5 Aug 2020 8:55 PM GMT (Updated: 2020-08-06T02:25:59+05:30)

தொழில்நுட்பம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கும் புதிய மொழியாக கருதப்படுகிறது. அந்தவகையில், தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் என்ஜினீயரிங் படிப்பு என்பது 45 விதமான படிப்புகளை படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்க்கை நெறி சார்ந்த படிப்புகளாகவும் கருதப்படுகிறது.

தொழில்நுட்பம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கும் புதிய மொழியாக கருதப்படுகிறது. அந்தவகையில், தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் என்ஜினீயரிங் படிப்பு என்பது 45 விதமான படிப்புகளை படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்க்கை நெறி சார்ந்த படிப்புகளாகவும் கருதப்படுகிறது. 1984-ம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு என்பது எட்டாக் கனியாக இருந்தது. இங்குள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத சூழ்நிலையில், தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பணம் கொடுத்து என்ஜினீயரிங் படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எம்.ஜி.ஆர். அந்த நிலையைமாற்றி, தமிழ்நாட்டிலேயே தனியார் சுயநிதி கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்த காரணத்தால், 500-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, தமிழக மாணவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்திலுள்ள கனிகளாக என்ஜினீயரிங் படிப்புகள் மாறிவிட்டன. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம் என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வசதிபடைத்தவர்கள் மட்டுமல்ல, சாதாரண ஏழை-எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் வகுப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்களும், மாணவிகளும் என்ஜினீயரிங் படித்து, பெரும்பாலானோர் கைநிறைய சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இதனால், அவர்கள் வாழ்க்கைத்தரம் மட்டுமல்ல, அவர்கள் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமே உயர்ந்தது.

தமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் என்ஜினீயரிங் படிக்க தமிழ்நாட்டை நாடிவரும் நிலை ஏற்பட்டது. தற்போது, 498 என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் 4 ஆண்டு படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 செமஸ்டர் வீதம் 8 செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன. தற்போது, பி.இ. என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, முதல் 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,200-ம், எம்.இ. போன்ற முதுகலை படிப்பு முதலாண்டுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.3,600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், பி.இ. என்ஜினியரீங் படிப்பில் முதலாம், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், எம்.இ. போன்ற முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், அதேபோல், எம்.சி.ஏ. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்த செமஸ்டருக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆக, இந்த மாணவர்களுக்கு எல்லாம், இந்த செமஸ்டர் தேர்வு கிடையாது. இந்தத்தேர்வை எழுதாமலேயே அடுத்த ஆண்டு வகுப்புக்கு சென்றுவிட முடியும். ஆனால், ரத்து செய்யப்பட்ட இந்த செமஸ்டர் தேர்வுகளுக்காக மாணவர்களிடம் இருந்து தேர்வுக்கட்டணம் வசூலித்து நாளைக்குள் அனுப்பவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. பல கல்லூரிகளில் ஆண்டு தொடக்கத்திலேயே தேர்வு கட்டணத்தை வசூலித்துவிட்டார்கள். மேலும், பல கல்லூரிகளில் தேர்வு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் நிறைய மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடியவில்லை.

இந்தநிலையில், இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டுவதுபோல, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணம் கேட்பது ஏற்புடையதல்ல. இந்த கொரோனா நேரத்தில் மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், ஏற்கனவே வசூலித்த தேர்வு கட்டண பணத்தை கல்லூரிகள், மாணவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டால், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில், ஒரு செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு வசதியாகவும் இருக்கும், அவர்கள் பெற்றோருக்கும் பணச்செலவு இல்லாமல் இருக்கும். எனவே, அண்ணா பல்கலைக்கழகம், தான் எடுத்த முடிவை திரும்பப்பெற்று, மாணவர்களின் நலனுக்காக இந்தத் தொகையை பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பச்சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதே நல்லது.

Next Story