மாநில மொழிகளில் வரைவு அறிக்கை


மாநில மொழிகளில் வரைவு அறிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2020 2:17 AM GMT (Updated: 7 Aug 2020 2:17 AM GMT)

மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகள் நாடு முழுவதிலும் இருந்து வந்தவண்ணம் இருக்கின்றன.

மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகள் நாடு முழுவதிலும் இருந்து வந்தவண்ணம் இருக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும், புதிய தொழிற்சாலைகள் உருவாகும், வேலைவாய்ப்புகள் பெருகும், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். மக்களின் கருத்தைக் கேட்காமல், எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு இது விசாலமான கதவைத் திறந்து வைக்கும், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

1984-ம் ஆண்டு போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து வந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்ததால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, லட்சக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். அதன் பாதிப்பு இப்போதும் அந்தப்பகுதியில் இருக்கிறது. இதைத்தொடர்ந்துதான் 1986-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமும், அதன் ஒரு அம்சமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்ற சட்ட முறையும் 1994-ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, 2006-ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இப்போது மத்திய அரசாங்கம் மேலும் பல திருத்தங்களை கொண்டுவந்து, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம்-2020” என்ற சட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 26-ன்படி, நிலக்கரி சுரங்கம், எண்ணெய், மீத்தேன், ஷேல் கியாஸ் போன்றவற்றை பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கும் போன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. பிரிவு 14-ன்படி இந்த திட்டங்கள் மற்றும் இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. 70 மீட்டர் சாலையை அகலப்படுத்துவது, நீர் ஆதார கட்டமைப்புகள், நீர்வழிப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்துதல், அகலப்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிறைவேற்றினால் சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எந்த தடையும் இருக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு பல்வேறு விமர்சனங்கள் கூறப்படுகின்றன. பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோர் இந்த வரைவு சட்டம் குறித்து தங்கள் கருத்துகள், மறுப்புகள், ஆட்சேபனைகள் இருந்தால் eia2020-moefcc@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என்றும், இதற்கான கால அவகாசம் வருகிற 11-ந்தேதி வரை இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரைவு அறிக்கை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட்டால்தான் மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த வரைவுச்சட்டத்தில் என்னென்ன இருக்கின்றன? என்பதை அறிந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும். எனவே அனைத்து மாநில மொழிகளிலும் இந்த வரைவு அறிக்கையை பத்திரிகைகள், டெலிவிஷன்களில் மத்திய அரசாங்கம் விளம்பரம் செய்து அனைவரும் அதன் அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்க இன்னும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பரந்த அளவில் பொதுமக்கள், நிபுணர்களிடம் கருத்துக்களைக்கேட்டு நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தி அதன்பிறகே இந்த வரைவு அறிக்கையை சட்டமாக்க வேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story