இ-பாஸ் பெற மக்கள் படும் பாடு!


இ-பாஸ் பெற மக்கள் படும் பாடு!
x
தினத்தந்தி 9 Aug 2020 8:44 PM GMT (Updated: 2020-08-10T02:14:35+05:30)

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர்க்கு அடுத்தாற்போல் 1667-ல் ஜான்மில்டன் எழுதிய “பாரடைஸ் லாஸ்ட்” - இழந்த சொர்க்கம் என்ற படைப்பும், “பாரடைஸ் ரீகெயின்டு” - மீண்ட சொர்க்கம் என்ற படைப்பும் மிகவும் புகழ்பெற்றவை.

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர்க்கு அடுத்தாற்போல் 1667-ல் ஜான்மில்டன் எழுதிய “பாரடைஸ் லாஸ்ட்” - இழந்த சொர்க்கம் என்ற படைப்பும், “பாரடைஸ் ரீகெயின்டு” - மீண்ட சொர்க்கம் என்ற படைப்பும் மிகவும் புகழ்பெற்றவை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த மகா காவியங்களை மிகவும் விரும்பி படிப்பார். அதேபோல கொரோனா, மக்களின் சகஜ வாழ்க்கையை இழந்த சொர்க்கமாக்கிவிட்டது. மீண்ட சொர்க்கமாக இந்த நிலைமை மாறவேண்டுமென்றால், கொரோனா பாதிப்பு முழுமையாக ஓயவேண்டும் என்று காத்திருப்பதில் பொருள் இல்லை. ஏனெனில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, எல்லோருக்கும் அதை போட்டு கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நிச்சயமாக ஒரு ஆண்டுக்குமேல் ஆகும். மக்களின் சகஜ வாழ்க்கைக்காக அதுவரையிலும் காத்திருக்க முடியாது. இந்தநிலையில், மத்திய அரசாங்கம் இப்போது இ-பாஸ் முறையை கட்டாயப்படுத்தவில்லை. 139 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் தாராளமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியவில்லை. எங்கு சென்றாலும் இ-பாஸ் வாங்கிச்செல்ல வேண்டியது இருக்கிறது. இ-பாஸ் பெறுவதும் எளிதாக இல்லை.

இ-பாஸ் பெற வேண்டுமென்றால், முதலில் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்பவர்கள் tnepass.tnega.org என்ற இணையதளத்திலும், வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வர விரும்புபவர்கள் rttn.nonresidenttamil.org என்ற இணையதளத்திலும், வெளிமாநிலம் செல்பவர்கள் rtos.nonresidenttamil.org என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், அரசு ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்தம் விண்ணப்பித்தல், வேறு இடத்தில் சிக்கித்தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனிநபர் விண்ணப்பிக்கலாம் என்று இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகப்பு பக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதுதவிர, இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப வரவழைக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்தால் எத்தனை முறை அனுப்பினாலும் மறுக்கப்படுகிறது என்று உடனடியாக தகவல் வந்துவிடுகிறது. யாராவது நெருங்கிய உறவினர்கள் மரணம் அடைந்தால் உடனடியாக செல்ல வேண்டுமென்ற நிலையில் இறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டியது இருக்கிறது. கிராமங்களில் இறப்பு சான்றிதழ் உடனடியாக பெற பல சிக்கல்கள் இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு காரணத்துக்கும் சான்றுகள் இணைக்கப்பட வேண்டியது உள்ளது. மேலும், இப்போது பஸ், ரெயில் இல்லை. இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படுவதில்லை. எல்லோருக்கும் கார் வசதி இருக்காது. எல்லோராலும் காரை வாடகைக்கு எடுத்தோ அல்லது விமானத்தில் செல்லவோ பொருளாதார வசதி இருக்காது.

இந்தநிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களுக்கிடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோல, மேலும் பல கட்சித்தலைவர்கள் இ-பாஸ் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிதாக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் வழங்குவதற்கு இப்போது ஒரு குழு மட்டுமே இருக்கும் நிலையில், மேலும் ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு உண்மையான காரணத்தை தெரிவித்து இ-பாஸ் வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். எனவே, ஒன்று இ-பாஸ் முறையையே ரத்து செய்யவேண்டும். அல்லது இ-பாஸ் விண்ணப்பத்தில் இந்த குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் தனிநபர் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையை மாற்றி, மேலும் பல காரணங்களுக்காக ஊர் செல்ல விரும்புபவர்களை அனுமதிக்க இதர காரணங்களும் இணைக்கப்படவேண்டும். மேலும் சாதாரண ஏழை-எளிய, நடுத்தர மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பஸ், ரெயில் வசதியை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும்.

Next Story