விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்


விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 12 Aug 2020 12:49 AM GMT (Updated: 12 Aug 2020 12:49 AM GMT)

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நீண்ட பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. 1967-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு, மாணவர்கள் அந்த நேரம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணமாகும். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. சென்றார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு விரும்பத்தகாத நிகழ்வை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனையை அவர் கடக்கிற நேரத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸ், அவரிடம் ஏதோ இந்தியில் கேட்டிருக்கிறார். உடனே கனிமொழி, எனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியவுடன், ஒரு எம்.பி. என்றும் பாராமல் அந்த பெண் போலீஸ், நீங்கள் இந்தியரா? என்று கேட்டிருக்கிறார். உடனே கனிமொழி, இந்தி தெரிந்தால்தான் ஒருவர் இந்தியர் என்ற நிலைப்பாடு எப்போது எடுக்கப்பட்டது? என்று கேட்டுவிட்டு, டுவிட்டரில் நிகழ்வை பதிவு செய்துவிட்டு விமானத்தில் ஏறிவிட்டார். அவர் விமானத்தில் இருக்கும்போதே, மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில் இருந்து, “உங்களுக்கு நிகழ்ந்த இந்த வருத்தமான சம்பவம் குறித்து நாங்கள் உரிய விசாரணை நடத்துகிறோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது எங்கள் கொள்கை அல்ல” என்று பதில் அளித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து உடனடியாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும் டுவிட்டரில், “கனிமொழி எம்.பி.க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், எனக்கு உள்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழி என்பதை மறுக்கும் வகையில், பல மத்திய அரசாங்க அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்கவேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், விமானங்களில் பயணம் செய்பவர்கள் என்றாலும் சரி, ரெயில்களில் பயணம் செய்பவர்கள் என்றாலும் சரி, மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என்றாலும் சரி, எல்லோருக்கும் ஆங்கிலமும், இந்தியும் தெரியும் என்றநிலை இல்லை. குறிப்பாக, விமானப் பயணத்தை மேற்கொள்வது வசதிபடைத்தவர்கள் என்றநிலை மாறி, குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்கியபிறகு, நடுத்தர மக்கள் ஏன், அவசரத்துக்கு சாதாரண மக்கள்கூட விமானப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். விமான நிலையங்களில் அவர்களிடம் அதிகாரிகள், கனிமொழியிடம் பேசியதுபோல இந்தியில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும் நிச்சயமாக புரியாது. எனவே, விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி என்றாலும் சரி, மற்ற பணிகளிலும் சரி, அதுபோல மற்ற அலுவலகங்களிலும் தமிழ் அதிகாரிகள், ஊழியர்களை அல்லது தமிழில் பேசத்தெரிந்தவர்களை நியமித்தால் நல்லது. விமானம் பறக்கத் தொடங்கும் முன்பு பணிப் பெண், பயணிகளிடம் அறிவிக்கும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பாதுகாப்பு நடைமுறைகளை கூறுகிறார்கள். இதற்கு பதிலாக விமானங்களில் தமிழிலும் கண்டிப்பாக அறிவிப்புகள் வெளியிடப்படவேண்டும். பணிப்பெண்களுக்கு தமிழில் பேசத்தெரிய வேண்டும். மொத்தத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சேவைகள் மற்றும் மத்திய அரசாங்க அலுவலகங்களிலும் பணிபுரிபவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் சாதாரண மக்களின் கோரிக்கையாகும்.

Next Story