கேரளாவில் நடந்த இரட்டைத் துயரம்


கேரளாவில் நடந்த இரட்டைத் துயரம்
x
தினத்தந்தி 12 Aug 2020 9:02 PM GMT (Updated: 2020-08-13T02:32:06+05:30)

“பட்ட காலிலேயே படும்” என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அது கேரளாவில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2018-ல் நிபா வைரஸ் பாதிப்பு, 2019-ல் பலத்த வெள்ளச்சேதம் என்று அல்லல்பட்ட கேரளாவில், இந்த ஆண்டு கொரோனா முதலில் காலடி எடுத்து வைத்ததோடு, இப்போது 2 துயரச்சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.

“பட்ட காலிலேயே படும்” என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அது கேரளாவில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2018-ல் நிபா வைரஸ் பாதிப்பு, 2019-ல் பலத்த வெள்ளச்சேதம் என்று அல்லல்பட்ட கேரளாவில், இந்த ஆண்டு கொரோனா முதலில் காலடி எடுத்து வைத்ததோடு, இப்போது 2 துயரச்சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசாங்கம் இயக்கத்தொடங்கிய “வந்தே பாரதம்” விமானங்களில் ஒன்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், 184 பயணிகள், 2 விமானிகள், 4 பணிப்பெண்களோடு வந்து இறங்கிய நேரத்தில், ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். இரவு 7.40 மணிக்கு கொட்டும் மழையில் இருமுறை தரையிறங்க முயன்றும் முடியாமல், 3-வது முறையாக இறங்க முயற்சித்த நேரத்தில்தான் இந்த கோரவிபத்து நடந்துள்ளது. விமானியும், துணை விமானியும் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் பலர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கொரோனாவுக்கு தப்பி வந்தவர்கள், இங்கே சொந்த மண்ணில் விமான விபத்துக்கு இரையாகி இருக்கிறார்கள்.

இந்தத் துயரத்திற்கு முன்னதாக மற்றொரு பெரும் துயரமாக மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிரோடு புதைந்த கொடூரச் சம்பவம் அரங்கேறிவிட்டது. இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு கேரள மாநிலத்தில் இருந்தாலும், அங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறைகள் தாண்டி கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் என பலர் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். மூணாறில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராஜமலை என்ற உயரமான மலைப்பகுதியில் பெட்டிமுடி என்ற மலைச்சரிவில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு 4 அடுக்குகளாக இருந்தன. இந்தப்பகுதியில், கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணோடு மண்ணாகின. இந்த வீடுகளில் 83 பேர் வசித்து வந்ததாகவும், 12 பேர் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் அப்படியே மணலில் புதைந்தனர்.

இந்த துயரச்சம்பவத்தில் சிக்கியவர்களில், 55 பேரின் உடல்கள் நேற்று வரை மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த மலைப்பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், மீட்புபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கஷ்டப்பட்டு மீட்கப்படும் உடல்களும் அழுகிய நிலையிலேயே இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி, உறவினர்கள் என்று 31 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போதே 7 நாட்களாகியும் இன்னும் எல்லா உடல்களும் மீட்கப்படவில்லை. இந்த தொழிலாளர்கள் எல்லாம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், தென்காசி அருகேயுள்ள புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

உயிரிழந்த அனைவருமே தமிழர்கள் என்ற வகையில், இந்த மனதை உருகச்செய்யும் சம்பவம் கேரளாவுக்கு மட்டும் துயரத்தைத் தரவில்லை. தமிழ்நாட்டிற்கும் துயரத்தை தந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லா வயது வரம்பிலும் பாரபட்சமின்றி உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு கண்ணன் தேவன் டீ எஸ்டேட் சார்பில் தலா ரூ.5 லட்சமும், கேரள அரசாங்கம் சார்பில் தலா ரூ.5 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற வகையில், தமிழக அரசும் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். கேரள அரசும், மூணாறு மலைப்பகுதியில் வாழும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு நிலச்சரிவு பாதிப்பு ஏற்படாத இடங்களில் குடியிருப்புகள் கட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும். போதும் இந்தத்துயரம். இனிமேலும் இதுபோன்றத் துயரங்கள் தொடரக்கூடாது.

Next Story