பெண்களுக்கு சொத்தில் சம உரிமை!


பெண்களுக்கு சொத்தில் சம உரிமை!
x
தினத்தந்தி 13 Aug 2020 10:12 PM GMT (Updated: 2020-08-14T03:42:48+05:30)

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு, சமநீதியை உருவாக்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க நீதியாகும்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு, சமநீதியை உருவாக்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க நீதியாகும். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்காவிட்டாலும், காலம்காலமாக அவர்களுக்கு திருமண நேரங்களில் ஏராளமான நகைகள் போட்டு அழகு பார்த்து அனுப்புவதும், வரதட்சணை தவறு என்றாலும், ஏராளமான தொகையை வரதட்சணையாக கொடுப்பதும், சீதனம் என்ற முறையில் அந்த பெண் திருமணம் ஆகி இல்வாழ்க்கையை தொடங்குவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுப்பதையும், பிறகு அந்த பெண்ணின் இறுதிகாலம் வரையில் பொங்கல் படி போன்ற பல்வேறு பண்டிகைகள், சடங்குகளில் சீர்செய்வதும் இன்றளவும் சகோதரர்கள் செய்யும் நடைமுறையாக இருக்கிறது. இருந்தாலும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் 1929-ம் ஆண்டே செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி 1989-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றியிருந்தார்.

இந்தநிலையில், இந்து வாரிசு உரிமை சட்டம் மத்திய அரசாங்கத்தால் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதில், தகப்பனாருக்கு சொந்தமான பரம்பரை சொத்தில், மகன்கள் பிறப்பின் அடிப்படையில் உரிமை உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடும்ப சொத்தில் மகன்களுக்கு இணையாக மகள்களுக்கும் உரிமை வழங்கும் வகையில், கடந்த 2005-ம் ஆண்டு ஏற்கனவே 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சொத்து பகிர்வு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டன. இந்த இந்து வாரிசு உரிமை சட்டம் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பிறந்த மகள்களுக்கு பொருந்துமா? என்பதில் 2016, 2018-ம் ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட பெஞ்சு அளித்த தீர்ப்பு, ஆணுக்கு பெண் சமம் என்ற ஒரு முரசை பலமாக எழுப்பியுள்ளது. இந்த சட்டப்படி, 2005-ம் ஆண்டுக்கு முன்கூட்டியே பிறந்த பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் ஒரு மகனுக்கு இணையான பங்கு உண்டு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே அந்த பெண்ணின் தந்தை உயிர் இழந்திருந்தாலும்கூட, சொத்தில் மகள்களுக்கு பங்கு வழங்கவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதில், ஏற்கனவே பெண்களுக்கு சொத்து பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தால், இந்த தீர்ப்பு மீண்டும் அந்த விவகாரத்தை கிளப்புவதற்கு வழிவகுக்காது என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் பெண் இனத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், சில குறிப்புகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதில், ஒரு மகள் எப்போதுமே ஒரு அன்பான மகளாகவே இருப்பார். ஒரு மகன் அவனுக்கு திருமணமாகி மனைவி கிடைக்கும்வரை மகனாக இருப்பார். ஆனால், ஒரு மகள் தன் வாழ்நாள் முழுவதும் மகளாகவே இருப்பாள் என்று கூறி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது இந்த தீர்ப்பு. இது நிச்சயமாக வரவேற்கத்தக்க தீர்ப்புதான். ஆண், பெண் என்ற வித்தியாசத்திற்கு, பாகுபாட்டிற்கு ஒரு முடிவுகட்டும் தீர்ப்புதான். ஆனால், இந்த தீர்ப்பு, தமிழ்நாட்டில் காலம்காலமாக குடும்பங்களில் பெண்களுக்கு, சகோதரர்களால் வழங்கப்படும் அன்புசார்ந்த உறவுமுறையில் மேற்கொள்ளப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் படிகளுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்துவிடக்கூடாது. “ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா... அண்ணன்-தங்கை உறவுமுறை மலர்ந்ததம்மா...” என்ற வகையில், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் உள்ள பாச உறவுகளுக்கு இடையே இந்த சொத்து பகிர்வு என்ற சுவர் பிரித்துவிடக்கூடாது. வாழ்வின் இறுதிவரை நீடிக்கவேண்டிய உறவு, இடையிலேயே முடிந்துவிடக்கூடாது.

Next Story