கடமைக்காக சோகத்தை மறைத்த பெண் இன்ஸ்பெக்டர்


கடமைக்காக சோகத்தை மறைத்த பெண் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 17 Aug 2020 9:45 PM GMT (Updated: 17 Aug 2020 5:40 PM GMT)

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியும், சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அதுபோல, மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். சுதந்திர தின விழாவில், போலீசாரின் அணிவகுப்பு மரியாதை பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கும். அப்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட போலீசாரின் அணிவகுப்பு மரியாதை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில், நெல்லை மாவட்டத்தில் நடந்த அணிவகுப்பில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.மகேஸ்வரி, மிடுக்காக நடந்து சென்றதும், “பரேட் அட்டென்ஷன், பரேட் சுலோப் ஆர்ம், ஜெனரல் சல்யூட், பிரசென்ட் ஆர்ம்ஸ்” என்று கம்பீரமான குரலில் முழங்கியதும், வாளை சுழற்றி “சல்யூட்” அடித்ததும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால், அந்த கம்பீரமான தோற்றத்திற்கும், குரலுக்கும் பின்னணியில் ஒரு பெரிய சோகம் இருந்ததை யாரும் அறியவில்லை.

அணிவகுப்பு முடிந்து கலெக்டருக்கும், மேலதிகாரிகளுக்கும் முறைப்படி “சல்யூட்” அடித்து வாளை உறையில் போட்டுவிட்டு, வெளியே நடந்து செல்லும்போது, அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. வெளியே காரில் அவரது கணவரான திருநெல்வேலி நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் குழந்தைகளோடு தயாராக காத்துக்கொண்டிருந்தார். அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதற்கு முந்தைய நாள்தான் பணிக்கு திரும்பியிருந்தார்.

துயரம் தாங்காமல் மகேஸ்வரி அழுததைப்பார்த்து, அவரது கணவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நேற்று இரவில் இந்த அணிவகுப்புக்கான ஒத்திகையை முடித்துவிட்டு, மகேஸ்வரி வீடு திரும்பியநேரத்தில், அங்கிருந்து 230 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரையில் அவரது தந்தை நாராயண சுவாமி இறந்துவிட்டார். உடனடியாக புறப்பட்டு செல்ல வேண்டியநிலை இருந்தும், சுதந்திரதின விழாவில் தான் ஏற்றுக்கொண்ட அணிவகுப்பை வழிநடத்தும் பொறுப்பை முடித்துவிட்டு செல்லவேண்டும் என்பதால்தான், தன் சோகத்தை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, அணிவகுப்பில் கலந்துகொண்ட அந்த துயரம் தெரியவந்தது. கடமையா?, பாசமா? என்ற நேரத்தில், தனக்கு கடமைதான் முதலில், அதற்கு பிறகுதான் பாசம் என்று, மனவலிமையோடு முடிவை எடுத்த பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தமிழக காவல்துறைக்கே ஒரு பெரிய பெருமையைத் தேடித்தந்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் நடந்த சுதந்திரதின அணிவகுப்புக்கு கூடுதல் சிறப்பும் உண்டு. தேசிய கொடியை ஏற்றியது, மாவட்ட பெண் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ். அணிவகுப்பை தலைமை தாங்கி நடத்தியது, பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.

ஏற்கனவே, பல முத்துக்களை கொண்ட தமிழக காவல் துறையின் மணிமகுடத்தில் இந்த சம்பவம் மேலும் ஒரு வைரக்கல்லாகும். சாத்தான்குளம் சம்பவத்தில் காயப்பட்டுக்கிடந்த தமிழக போலீசுக்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, நல்ல மருந்தை தந்திருக்கிறார். காவல்துறை மீது விழுந்திருந்த பழியை, தன் கடமை உணர்ச்சியால் தொட்டு துடைத்திருக்கிறார். தந்தையை இழந்த துயரத்தை சீருடையில் மறைத்துக்கொண்டு, வீரவாள் ஏந்திவந்த வெற்றி மங்கையாக அவர் வீரநடை போட்டபோது, அவருடைய சோகத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தந்தையைவிடவும் இந்த தாய்நாட்டில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்கு மரியாதை செலுத்தும் கடமைதான் எனக்கு கண் என்று கருதும் வெற்றித்திருமகள் மகேஸ்வரி. இவர்களைப்போன்ற கடமை உணர்ச்சிமிக்க காவல்துறை வீரர்களால்தான் தமிழ்நாட்டு காவல்துறை, தன் சீருடையைப்போல நிமிர்ந்து நிற்கிறது. ஒரு சிலரால் நேர்கிற பழியை மகேஸ்வரியை போன்ற பலர் தங்களின் தீரத்தால் துடைத்துவிடுகிறார்கள். “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்” என்று கும்மியடிக்கும் பாரதியின் புதுமைப்பெண்கள் வரிசையில் மாபெரும் அடையாளமாகிறார், மகேஸ்வரி.

Next Story