பெண்கள் திருமணம் செய்ய சரியான வயது எது?


பெண்கள் திருமணம் செய்ய சரியான வயது எது?
x
தினத்தந்தி 19 Aug 2020 9:30 PM GMT (Updated: 2020-08-20T00:04:18+05:30)

உலகில் திருமண வயது தொடர்பாக பல நாடுகளில் பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. சில நாடுகளில் குறைந்தபட்ச வயதே கிடையாது.

திருமணம் என்பது இருமனங்கள் கலப்பது. இரு குடும்பங்கள் சேர்ந்து முடிவு செய்வது. யாரை, யார் திருமணம் செய்துகொள்வது?, எப்போது திருமணம் செய்வது?, எங்கு திருமணத்தை நடத்துவது? என்பதெல்லாம், திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்களும், அவர்கள் குடும்பத்தினர்களும் முடிவு செய்வதுதான் சமுதாயத்தில் இன்றும் ஒரு நடைமுறையாக இருக்கிறது.

பொதுவாக கிராமங்களில் சொல்வார்கள். “அவனுக்கும் பிடிக்கிறது, அவளுக்கும் பிடிக்கிறது, இரு குடும்பங்களுக்கும் பிடிக்கிறது. பிறகு என்ன தடை? திருமணத்தை ஜாம்.. ஜாம்.. என்று நடத்துவதுதானே” என்பார்கள். அந்த வகையில், திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட சுதந்திரம் என்பதுதான் எல்லோருடைய கருத்தும் ஆகும். தற்போது ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து உயர்த்த மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்ற வகையில், சில கருத்துகளை பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று அவர் உரையில் தெரிவித்த கருத்துகள் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. பெண்கள் திருமணம் செய்வதற்கு எது சரியான வயது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்தவுடன் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத நிலைமையை முடிவுக்கு கொண்டுவரத்தான், திருமணத்திற்கு ஏற்ற வயதை ஆராய்ந்து முடிவு செய்ய இந்த கமிட்டியை அமைத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தெரிவித்து இருக்கிறார். பெண்களின் திருமண வயது 15-ல் இருந்து 18 ஆக 1978-ல் ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 1929-ம் ஆண்டு சாரதா சட்டத்தை திருத்தி நிறைவேற்றப்பட்டது என்று கூறி, திருமணம் வயதை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து சில கருத்துகளை கூறினார். இதுகுறித்து, ஜெயா ஜெட்லி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது. அந்தக்குழு இன்னும் தனது அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

உலகில் திருமண வயது தொடர்பாக பல நாடுகளில் பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. சில நாடுகளில் குறைந்தபட்ச வயதே கிடையாது. சில நாடுகளில் 14 வயதுக்கும் குறைந்த வயதிலேயே திருமணம் செய்துகொள்ளலாம். இந்தியா உள்பட 143 நாடுகளில் 18 வயது என்றும், 20 நாடுகளில் 21 வயது என்றும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளிலும் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட, ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு விதமான சட்டங்கள் இருக்கின்றன. கலிபோர்னியா, மாசசூசெட்ஸ், மிச்சிகன், மிசிசிப்பி, நியூ மெக்சிகோ, ஓக்லஹோமா, ரோட் ஐலண்ட், வாஷிங்டன், வெஸ்ட் வெர்ஜினியா, வியோமிங் ஆகிய 10 மாகாணங்களில் திருமணம் செய்துகொள்ள வயது வரம்பே கிடையாது. கடந்த ஜூன் மாத கணக்குப்படி, 40 மாகாணங்களில் 14 வயது முதல் 18 வயதுவரை குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெற்றோரின் சம்மதத்தின் பேரிலோ, சம்மதம் இல்லாமலோ திருமணம் செய்யலாம் என்ற நிலையும் இருக்கிறது. ஆக, அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவில் குறைந்தபட்ச திருமண வயது நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை யோசிக்க வேண்டும். திருமணத்தை குடும்பச் சூழ்நிலை, அவர்களது தனி விருப்பம், பெற்றோரின் விருப்பம் ஆகியவைதான் முடிவு செய்யவேண்டுமே தவிர, சட்டம்போட்டு திருமண வயதை நிர்ணயிக்க முடியாது. கிராமங்களில் பொருளாதார நிலைமையை மேம்படுத்தி, எல்லா குடும்பங்களிலும் தனிநபர் வருமானத்தை பெருக்கி, பெண் கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தால், சட்டம் நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லாமல், பெண்களின் திருமண வயது தானாகவே உயர்ந்துவிடும்.

Next Story