இந்தி மட்டுமல்ல, ஆங்கிலமும் அலுவல் மொழிதான்!


இந்தி மட்டுமல்ல, ஆங்கிலமும் அலுவல் மொழிதான்!
x
தினத்தந்தி 23 Aug 2020 11:02 PM GMT (Updated: 2020-08-24T04:32:21+05:30)

இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுமே மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகள்தான். அதனால்தான், மத்திய அரசாங்க அறிவிப்புகள், உத்தரவுகள் எல்லாம் இந்தியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகின்றன.

இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுமே மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகள்தான். அதனால்தான், மத்திய அரசாங்க அறிவிப்புகள், உத்தரவுகள் எல்லாம் இந்தியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகின்றன. ஆனால், சமீப காலங்களாக கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, இந்தி மட்டுமே அலுவல்மொழி என்பதுபோல, மத்திய அரசாங்க அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில், கனிமொழி எம்.பி.யிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஒருவர், இந்தி தெரியவில்லை என்ற காரணத்திற்காக, “நீங்கள் இந்தியரா?” என்று கேட்டிருக்கிறார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், உடனடியாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “கனிமொழி எம்.பி.க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், நான் உள்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்துவருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில், பல மத்திய அரசாங்க அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக கண்டிக்கவேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். அவர் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஒரு துறையின் செயலாளருடன் நடத்திய கூட்டத்தில், அவரிடம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அந்த செயலாளர், இந்தியிலேயே பேசியிருக்கிறார். “எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று ப.சிதம்பரம் கூறிய பிறகும்கூட அந்த அதிகாரி இந்தியில்தான் பேசினார் என்றால், இந்தி வெறி உயர்மட்ட அதிகாரிகள்வரை எவ்வாறு ஊடுருவிவிட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆங்கிலம் தெரியாதென்றால், எப்படி அவர் துறையின் பொறுப்புகளை கவனித்துக்கொள்ள முடியும்?.

இதேபோல, ஒரு சம்பவம் இப்போதும் நடந்திருக்கிறது. ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய 6 இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், இந்தியா முழுவதிலுமுள்ள யோகா பயிற்சியாளர்களுக்கு தேசிய அளவில் 3 நாள் பயிற்சி இணையதளம் மூலமாக அளிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா மருத்துவ முறையை மேம்படுத்துவது தொடர்பாக நடந்த இந்த பயிற்சியில், தமிழ்நாட்டிலிருந்து 37 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். தொடக்கத்திலிருந்தே இந்தியில்தான் இந்த பயிற்சி நடந்ததால், இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மட்டுமல்ல, தென் மாநில பயிற்சியாளர்கள் யாருக்கும், என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. ஆங்கிலத்தில் நடத்துங்கள், இல்லையென்றால், ஆங்கிலத்திலும், இந்தியிலும் தனித்தனியாக நடத்துங்கள் என்று சொன்னபோதும், எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல, ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா பேசும்போதும் இந்தியில்தான் பேசியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை எழுந்தபோது, அவர் நான் இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று நினைப்பவர்கள் வெளியேறிவிடலாம். இந்தி புரியாதவர்கள் வெளியேறிவிடலாம். எனக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேசத்தெரியாது என்றெல்லாம் கூறியதாக பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த அதிகாரியோ, இது தொடர்பான வீடியோ திரிக்கப்பட்டுள்ளதாக கூறி மறுத்துள்ளார். என்றாலும், இந்த 3 நாள் பயிற்சியால் தமிழகம் மற்றும் தென்மாநில பயிற்சியாளர்களுக்கும் பலனில்லை.

இந்த செயலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மத்திய அரசாங்கம் உடனடியாக தமிழ், ஆங்கிலம் இரண்டுமே அலுவல் மொழிகள்தான் என்பதை உறுதிபட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தெரிவிக்கவேண்டும். இதுபோன்ற, அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும்போது, அதை ஆங்கிலத்தில் நடத்தவேண்டும், இல்லையென்றால் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியில் தனியாக நடத்திவிட்டு, இந்தி தெரியாத பிரதிநிதிகளுக்கு ஆங்கிலத்தில் தனியாக நடத்தவேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கோரிக்கை.

Next Story