ஜனநாயகத்தின் இரு சக்கரங்கள்!


ஜனநாயகத்தின் இரு சக்கரங்கள்!
x
தினத்தந்தி 24 Aug 2020 11:13 PM GMT (Updated: 2020-08-25T04:43:25+05:30)

“வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும். அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால், எந்த வண்டி ஓடும்?” என்று ஒரு அருமையான தத்துவப்பாடலை மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதி, ஒரு திரைப்படத்தில் அவரே பாடுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

“வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும். அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால், எந்த வண்டி ஓடும்?” என்று ஒரு அருமையான தத்துவப்பாடலை மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதி, ஒரு திரைப்படத்தில் அவரே பாடுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதுதான் ஜனநாயகத்தின் தத்துவமும்கூட. ஆட்சி, நிர்வாகம் என்ற வண்டி வேகமாக செல்லவேண்டும் என்றால், உரிய இடத்திற்குப் போய்ச்சேரவேண்டும் என்றால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே இருசக்கரங்களாக சுழன்றால்தான் முடியும். இதைவிட்டுவிட்டு ஒரு சக்கரம் சுழலவில்லை என்றால், பயணம் இனியதாக இருக்காது.

அந்தவகையில், எந்த அரசு விழாக்கள் என்றாலும் சரி, அந்த விழா நடைபெறும் தொகுதியிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை அழைப்பிதழ்களில் போடப்படுவதும், கல்வெட்டில் பொறிக்கப்படுவதும் மரபாக இருந்துவருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தன்னை அரசு விழாவுக்கு அழைக்கவில்லை என்று கூறி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மீது உரிமை பிரச்சினை ஒன்றை கோரிய நேரத்தில், சபாநாயகர் ப.தனபால், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அரசு விழாக்களுக்கு அழைக்கவேண்டும். அவர்களின் பெயர்களை அழைப்பிதழ்களில் பிரசுரிக்கவேண்டும் என்று கூறி, இந்த மரபை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தினார்.

இது ஒரு மரபாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அரசு நடத்தும் விழாக்களில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதும் ஒரு மரபாக இருக்கிறது. எனவே, இனி அரசு நடத்தும் விழாக்களில், எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களை மாவட்ட நிர்வாகம் முறைப்படி அழைக்கவேண்டும். அவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்துகொள்ள வேண்டும். விழாவில் அவர்களுக்குரிய முக்கியத்துவம் பாகுபாடின்றி கொடுக்கப்படவேண்டும். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் இடமாக வைக்காமல், விழாவின் கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும் என்பதுதான் மக்களின் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. ஆளுங்கட்சியினரையும், எதிர்க்கட்சியினரையும் அரசு நடத்தும் விழா மேடைகளில் ஒன்றாக பார்க்கவேண்டும். கருத்து வேறுபாடுகள் அவரவர் நடத்தும் கட்சிக்கூட்டங்களில் எதிரொலிக்கட்டும். அரசு விழாக்களில் நட்புறவு மிளிரட்டும்.

இந்தநேரத்தில், தற்போது மாவட்டங்களில் முதல்-அமைச்சர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பிரதிநிதிகளை அனுமதிக்க அரசு மறுக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தர்மபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனுமதிக்கப்படவில்லை. அரசு செலவில், அரசு அதிகாரிகளுடன், அதுவும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை.

இதுகுறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசும்போது, “நாங்கள் யாரையும் தடை செய்வது கிடையாது. ஆய்வுக் கூட்டத்திற்கு வரும் முன்பு அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும். நான்கூட கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் இங்கு வந்திருக்கிறேன். கொரோனா பரிசோதனை செய்தபிறகு வருபவர்கள் யாரையும் நாங்கள் தடை செய்வது கிடையாது. யாரையும் புறக்கணிக்கும் எண்ணமும் அரசுக்கு கிடையாது” என்று கூறியிருப்பது ஒரு நல்ல தொடக்கத்தின் வாசலை திறந்து வைத்திருப்பதைப்போல இருக்கிறது. ஆக, இனி முதல்-அமைச்சர் நடத்தும் ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களையும் அழைக்கவேண்டும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். அவர்களும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான கருத்தாக இருக்கிறது. எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனத்திற்கு பிறகு, அதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்த பிறகு, இனி இந்த விவகாரம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. முதல்-அமைச்சரே சொல்லிவிட்டார், மாவட்ட நிர்வாகம் அதை ஏற்று செயல்படவேண்டும்.

Next Story