இ-பாஸ் வேண்டும்; போக்குவரத்தும் வேண்டும் !


இ-பாஸ் வேண்டும்; போக்குவரத்தும் வேண்டும் !
x
தினத்தந்தி 28 Aug 2020 9:30 PM GMT (Updated: 2020-08-28T23:58:36+05:30)

மத்திய அரசாங்கம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் செல்வதற்கோ, பொருட்களை கொண்டு செல்வதற்கோ எந்த தடையும் இருக்கக்கூடாது என்று அறிவித்தது.

கொரோனா பரவல் வேகமாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், தேவையில்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு மக்கள் ஏராளமாக செல்வதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை வந்தது. ஆரம்பத்தில் இ-பாஸ் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திருமணம், நெருங்கிய உறவினர்களின் மரணம், மருத்துவ சிகிச்சை போன்ற ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் கொடுக்கப்பட்டு வந்தது. எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ?, அந்த மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் அடிப்படையிலேயே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசாங்கம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் செல்வதற்கோ, பொருட்களை கொண்டு செல்வதற்கோ எந்த தடையும் இருக்கக்கூடாது என்று அறிவித்தது. தமிழ்நாட்டில் இ-பாஸ் வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக இலகுவாக்கிவிட்டார். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் வெளியே வந்து தங்கள் வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர். இப்போது கேட்பவர்களுக்கு எல்லாம் இ-பாஸ் கிடைத்துவிடுகிறது. யார்? யார்? கேட்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் தங்குதடையில்லாமல் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், “இ-பாஸ் இருந்தால்தான், யாருக்காவது கொரோனா வந்திருந்தால், அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்ய முடியும். இப்படிப்பட்ட கொடிய நோயை தடுக்கத்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதும் நியாயமாகத்தான் இருக்கிறது. எனவே, எளிதாக இ-பாஸ் கிடைக்கும்போது, அதை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. இ-பாசும் இருக்கட்டும். இதுகுறித்து, இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது, அலுவலகங்கள் எல்லாம் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. மக்களும் தங்குதடையில்லாமல் வெளியே நடமாட முடிகிறது. ஆனால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அன்றாடப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும்போது, அதற்கான போக்குவரத்து வசதியில்லாததுதான் பெரும் குறையாக இருக்கிறது. புறநகர் பகுதியில் இருப்பவர்கள், வெகுதூரம் இருசக்கர வாகனங்களிலோ, அதிக பணம் கொடுத்து ஆட்டோவிலோ, வேனிலோ வர வேண்டியது இருக்கிறது. வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை இவ்வாறு போக்குவரத்திற்கே செலவழிக்க வேண்டியது இருக்கிறதே என்பது மக்களின் குறையாக இருக்கிறது. இதுபோல வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், ஆயிரக்கணக்கில் வேன்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டைவிட அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மராட்டியத்தில் பஸ்கள் ஓட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் பஸ், ரெயில்களை ஓட அரசு அனுமதிக்கவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்யவேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை விதித்து, பொது போக்குவரத்தை உடனடியாக தொடங்கவேண்டும். இப்போதே இ-பாஸ் வாங்கி வெளியூர்களில் இருந்து வருபவர்கள், வாடகைக்கு இயக்கப்படும் வேன்களில் ஒரு சீட்டுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பயணம் செய்கிறார்கள். மாவட்ட எல்லைகளில் இருக்கும் போலீசாரும் அதை அனுமதித்து விடுகிறார்கள். அதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றி ரெயில்களிலும், பஸ்களிலும் இடைவெளிவிட்டு 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்துவர வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி இயக்கலாம். மெட்ரோ ரெயில் நிர்வாகம் நாங்கள் ரெடி என்கிறது. போக்குவரத்து கழகங்களும் ரெடியாக இருக்கின்றன. மக்களும் கூடுதல் கட்டணத்தை கொடுத்து பயணிக்க நாங்கள் ரெடி என்கிறார்கள். ஆக எல்லோரும் ரெடியாக இருக்கும்போது, அரசாங்கமும், நாங்களும் ரெடி என்று பச்சைக் கொடியை காட்ட வேண்டும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் வேலைக்கு வரவேண்டும், ஆனால் போக்குவரத்து வசதி கிடையாது என்றால், இதைவிட வேறு என்ன கஷ்டம் எங்களுக்கு இருக்க முடியும்? என்பது மக்களின் சோக கீதம்.

Next Story