மாநில அரசுகள் மீது கடன் சுமையா?


மாநில அரசுகள் மீது கடன் சுமையா?
x
தினத்தந்தி 1 Sep 2020 9:34 PM GMT (Updated: 2020-09-02T03:04:47+05:30)

கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டது. உற்பத்தி சரிந்ததோடு, மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. இதனால், வர்த்தகம் வீழ்ந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும், அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டது. உற்பத்தி சரிந்ததோடு, மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. இதனால், வர்த்தகம் வீழ்ந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும், அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த நேரத்தில், பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் வாங்கும் சக்தியற்ற மக்களையும், வருமானம் இல்லாமல் தவிக்கும் மாநில அரசுகளையும், மத்திய அரசாங்கம்தான் கைதூக்கிவிட வேண்டும்.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு, நடந்து முடிந்த 41-வது ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) கவுன்சில் கூட்டத்தில் வெளிவந்த முடிவுகளில் இருந்தேதெரிகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு 14 சதவீத வருமான உயர்வு இல்லையென்றால், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தருவதாகவும், அந்த இழப்பீட்டு தொகைக்காக கார்கள், குளிர்பானம், பான்மசாலா, புகையிலை, நிலக்கரி போன்ற பல பொருட்களுக்கு, 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை செஸ் என்ற மேல் வரியை விதித்து இழப்பீடு சரிசெய்யப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இப்போதே பல மாநிலங்களுக்கு இழப்பீட்டுதொகை பெருமளவில் வராமல் இருக்கிறது. தமிழக அரசுக்கே ரூ.12,258 கோடியே 94 லட்சம் இழப்பீட்டுதொகை வரவேண்டியுள்ளது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அனைத்து மாநில நிதி மந்திரிகளும் கலந்துகொண்ட 41-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், “கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு மாநில அரசுகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். கொரோனாவை கடவுளின் அசாதாரண செயல்” என்று குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “இந்த ரூ.3 லட்சம் கோடியில், ரூ.65 ஆயிரம் கோடியை இழப்பீட்டு மேல் வரி மூலமாக வசூலித்து மத்திய அரசாங்கம் தரும். மேலும், ரூ.97 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி மூலமாக மாநில அரசுகள் கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்த கடனை, இப்போது 2022-ம் ஆண்டு ஜூன் வரை வசூலிப்பது என முடிவு செய்யப்பட்ட மேல் வரியை, இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதை வசூலித்து மத்திய அரசு தந்துவிடும். மீதமுள்ள தொகையை மாநிலங்களே கடன் திரட்டி சரிசெய்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஒன்று இந்த ஆலோசனைக்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால், ரூ.3 லட்சம் கோடியில் மத்திய அரசு இழப்பீடாக தரும் ரூ.65 ஆயிரம் கோடி போக மீதமுள்ள ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடியையும் மாநில அரசுகளே வெளிச்சந்தையில் கடன் திரட்டி சமாளித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்த 2 ஆலோசனைகளுமே மாநில அரசுகளுக்கு பாதிப்பை தரும் என்பதால், தமிழ்நாடு மற்றும் பல மாநில அரசுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே கடன் சுமையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இனியும் கடன் வாங்கச்சொன்னால், மாநில அரசுகளால் தாங்கமுடியாது. கடந்த ஜூன் மாதமே நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ரூ.85 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இனியும் கடன் வாங்கினால் அந்த தொகை மேலும் அதிகமாகிவிடும்.

மேல் வரியை நீட்டித்தால் மக்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பொருட்களின் விலை இன்னும் உயர வழிவகை செய்துவிடக்கூடாது. தொழிற்சாலைகள் மிகுந்த மராட்டிய மாநிலம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை கைவிடுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று கூறியிருக்கிறது. இதே கருத்து பல மாநிலங்களுக்கும் இருக்கிறது. ஏன் மக்களுக்கும் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி வேண்டாம், பழைய முறைப்படி மதிப்பு கூட்டுவரியே சிறந்தது என்ற எண்ணம் மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் வராமல் இருக்கவேண்டும் என்றால், மத்திய அரசாங்கம் ஜி.எஸ்.டி.யில் குறைந்த வரி விதிப்பும், மாநில அரசுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் வெகுதாராளத்தையும் கொண்டுவந்தால்தான் முடியும்.

Next Story