கொரோனா எந்த தளர்வுகளையும் வழங்கவில்லை !


கொரோனா எந்த தளர்வுகளையும் வழங்கவில்லை !
x
தினத்தந்தி 4 Sep 2020 7:35 PM GMT (Updated: 2020-09-05T01:05:56+05:30)

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பல தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பல தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது, கடைகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே பஸ் ஓடப்போகிறது, மெட்ரோ ரெயில் உள்பட ரெயில் போக்குவரத்து தொடங்கப்போகிறது. ஆனால், மக்கள் எல்லாம் கொரோனாவே முற்றிலும் ஒழிந்துவிட்டதுபோல, எந்தவித கவலையும் இல்லாமல், எந்த இடத்தில் பார்த்தாலும், கூட்டம் கூட்டமாக இருப்பதை காணமுடிகிறது. ‘தினத்தந்தி’யில் வெளியான ஒரு படத்தில், புறநகர் பஸ்சில் மக்கள் சமூக இடைவெளியின்றி நெருக்கியடித்துக்கொண்டு பயணம் செய்வதை பார்க்கும்போது, தளர்வுகள் எல்லாம் கொரோனா பற்றிய பயத்தை காற்றில் பறக்கவிட வைத்துவிட்டதோ? என்று அஞ்சத்தோன்றுகிறது.

தற்போது, பொது மருத்துவர்களின் ‘வாட்ஸ்-அப்’ குரூப்பில் பரவிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது. 1918-ம் ஆண்டு இதுபோல செய்த தவறுகள், மீண்டும் திரும்ப செய்யப்படுவதை “மனிதகுலம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்ற தலைப்பில் வந்த செய்தியில், “சரித்திரத்தின் பாடங்கள்” என்ற துணை தலைப்பில் சரித்திரத்தில் மிகமோசமான தொற்று நோய் என்றால் அது 1918-ம் ஆண்டு பரவிய ‘ஸ்பானிஷ் புளு’ என்று கூறப்படும் புளு தொற்று நோய்தான். உலகம் முழுவதும் இது 2 ஆண்டுகள் நீடித்தது. 3 அலைகளாக திரும்ப திரும்ப வந்தது. 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 5 கோடி மக்கள் இறந்தனர். பெரும்பாலான உயிரிழப்புகள் 2-வது வந்த அலையின்போது வந்தது. காரணம், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மக்களும், சமூக இடைவெளி நடவடிக்கைகளை பின்பற்றிய மக்களும், கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியோடு தெருக்களில் உலாவினர். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தூரதூக்கி எறிந்தனர். அதன்பிறகுதான் 2-வது அலை தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அதே தவறை மீண்டும் செய்து சரித்திரத்தை திரும்ப வைத்துவிடக்கூடாது. அரசுதான் தளர்வுகளை வழங்கியுள்ளதே தவிர, கொரோனா எந்த தளர்வுகளையும் வழங்கவில்லை என்றே அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இது டாக்டர்களுக்கான செய்தி அல்ல. பொதுமக்களுக்கான செய்தி. அந்தவகையில், இந்த செய்தி பொதுமக்களுக்கும் பகிரப்படவேண்டும். ‘ஸ்பானிஷ் புளு’ என்ற தொற்றும், கொரோனா தொற்றும் ஏறத்தாழ ஒன்றுதான். இரண்டுக்குமே அறிகுறிகள் ஒன்றுதான். இரண்டுமே உலகம் முழுவதையும் பாதித்தாலும், இந்தியாவை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய தொற்றுகள்தான். அந்த புளு தொற்று தளர்வுகளை அறிவித்தபிறகுதான் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து 2-வது அலையாக மாறியது. அந்தநேரத்தில் இந்தியாவில் ஏறத்தாழ 1 கோடியே 30 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த புளு தொற்று இந்தியாவில் முதலில் மும்பையிலும் அடுத்து சென்னையிலும், கொல்கத்தாவிலும் பரவி பெரும்பாலானோரை பாதிப்புக்குள்ளாக்கியது. அந்த நேரத்திலும் இப்போதுபோல, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் ஏற்பட்ட பாதிப்புகளின்போது விதிக்கப்பட்ட தளர்வுகளுக்குப்பிறகுதான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. அந்தநிலை இப்போது தமிழ்நாட்டுக்கு வந்துவிடக்கூடாது.

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பாதிப்பில் 62 சதவீதம் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில்தான் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மொத்த உயிரிழப்புகளில் 70 சதவீத உயிரிழப்புகள் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில்தான் இருக்கிறது. எனவே, கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முன்னணியாக இருக்கும் தமிழ்நாட்டில், 1918-ல் புளு தொற்று ஏற்படுத்திய நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது. அது மக்களின் ஒத்துழைப்பிலும், அரசு மேற்கொள்ளப்போகும் கடுமையான நடவடிக்கைகளிலும்தான் இருக்கிறது. 1918-ம் ஆண்டு தொடங்கிய புளு தொற்று, 1920-ம் ஆண்டுவரை நீடித்தது. கொரோனா தொற்று 2 ஆண்டுகள் நீடித்தால் மக்களின் வாழ்வாதாரம் பூஜ்ஜியத்துக்கு சென்றுவிடும். அரசின் பொருளாதாரமும் அடிமட்டத்துக்கு சென்றுவிடும் என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு, கவனமாக தங்கள் வாழ்க்கை முறையை வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story