காணொலியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்


காணொலியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2020 8:22 PM GMT (Updated: 2020-09-11T01:52:27+05:30)

கொரோனா பரவல் வேகமாக இருக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். பெரும் கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் கொரோனா பரவலைத்தடுக்க அறிவுரைகள் கூறப்படுகின்றன.

கொரோனா பரவல் வேகமாக இருக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். பெரும் கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் கொரோனா பரவலைத்தடுக்க அறிவுரைகள் கூறப்படுகின்றன. பல தனியார் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும் தினமும் அறைகளில் கூட்டம் கூட்டுவதைவிட்டுவிட்டு, காணொலிக்காட்சி மூலமாகவே ஆலோசனை நடத்துகிறார்கள். சமீபத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி நடத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் 3 லட்சத்திற்கு அதிகமான பங்குதாரர்கள், 41 நாடுகளில் உள்ள 473 நகரங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பங்கேற்றார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி இதே முறையைத்தான் பின்பற்றுகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் உள்பட பல கூட்டங்களைக் காணொலிக்காட்சி மூலமாகத்தான் நடத்துகிறார். அதுபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில் இருந்தே காணொலிக்காட்சி மூலமாகவே மாவட்டச்செயலாளர்கள் கூட்டம், உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டக்கழக கூட்டம் என்று தினமும் ஏதாவது ஒரு கூட்டத்தை நடத்திவருகிறார். தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள்கூட இணையவழி ஆர்ப்பாட்டங்களாகவே நடத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை பொதுக்குழு கூட்டத்தை காணொலிக்காட்சி மூலமாக நடத்தியதில்லை. ஏனெனில், பொதுக்குழு என்றால் நிறையகூட்டம் வரும் என்பதற்காக, அரசியல் கட்சிகளில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டாமல் இருக்கும்நிலை தற்போதுள்ளது. ஆனால், தி.மு.க.வில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டப்படவேண்டும் என்று சட்டவிதி இருக்கிறது. அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டத்தைக்கூட்ட முடியவில்லை.

இந்தநிலையில், இனியும் பொதுக்குழுவை தள்ளிப்போடவேண்டாம் என்ற முடிவை எடுத்த மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலமாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். தமிழ்நாடு முழுவதுமுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவர் மாவட்டங்களில் இருந்தே இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க.வுக்கு கட்சி ரீதியாக 67 மாவட்டங்கள் இருக்கின்றன. நாட்டிலேயே காணொலிக்காட்சி மூலமாக பொதுக்குழுவை நடத்தி ஒரு புதிய வரலாறை தி.மு.க. உருவாக்கியுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் இந்தக்கூட்டம் நடப்பதற்கென ஒதுக்கப்பட்ட கட்சி அலுவலகங்கள், மண்டபங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமான டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், மு.க.ஸ்டாலின் உள்பட அனைவருடைய பேச்சும் காணொலிக்காட்சி மூலம் எல்லா மாவட்டங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் இந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடிந்தது. காணொலிக்காட்சி மூலம் நடந்த இந்தக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக யாரும் அழைக்கப்படவில்லை. செல்போன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களும் முககவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தி.மு.க.வில் கலைஞர் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலாளராகவும், மு.க.ஸ்டாலின் பொருளாளராகவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தனர். 2017-ல் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்றவுடன், துரைமுருகன் பொருளாளராக இருந்தார்.

இந்தநிலையில், கலைஞர் மறைவுக்குப்பிறகு மு.க.ஸ்டாலின் 2018-ல் தி.மு.க.வின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சில மாதங்களுக்கு முன்பு பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் இறந்தபிறகு, புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. தி.மு.க. சட்டத்திட்டப்படி, பொதுக்குழுவில்தான் தலைவர் என்றாலும் சரி, பொதுச்செயலாளர் என்றாலும் சரி, பொருளாளர் என்றாலும் சரி முறையாக அறிவிக்கப்படவேண்டும். அந்தவகையில், இந்த காணொலி பொதுக்குழுவில் தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காணொலிக்காட்சி மூலம் பெரிய கூட்டங்களை, அது அரசு விழாவாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்றாலும் சரி, நடத்த முடியும் என்பதற்கு தி.மு.க. நடத்திய இந்த காணொலி பொதுக்குழு முன்னுதாரணமாக இருக்கிறது.

Next Story