தலையங்கம்

சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்! + "||" + Tamil Nadu tops in road accidents

சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்!

சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்!
தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் வரிசையிலோ, அனைவரும் கல்வி அறிவு பெற்ற மாநிலப் பட்டியலிலோ முதலிடத்திற்கு வராத தமிழ்நாடு, சாலை விபத்துகளில் மட்டும் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது.
தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் வரிசையிலோ, அனைவரும் கல்வி அறிவு பெற்ற மாநிலப் பட்டியலிலோ முதலிடத்திற்கு வராத தமிழ்நாடு, சாலை விபத்துகளில் மட்டும் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது. கடந்த 8.9.2017 அன்று “தினத்தந்தி”யில் “சாலை விபத்துகளில் முதலிடம் வேண்டாமே!” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், 2016-ம் ஆண்டுக்கான இந்திய சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்துக்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த ஆண்டு மட்டும் 17,218 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தொடங்கி சமீபத்தில் 2019-ம் ஆண்டுக்கான விபத்துகள் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டது வரை தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.


தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதுக்குமான சாலை விபத்துகள் பட்டியலில் தொடர்ந்து தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் கணக்கை எடுத்துக்கொண்டால், 57,228 சாலை விபத்துகள் 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. முதலிடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. 2-வது இடத்திலுள்ள மத்தியபிரதேசத்தில் 51,641 விபத்துகளும், 3-வது இடத்திலுள்ள கர்நாடகாவில் 40,644 விபத்துகளும் நடந்துள்ளன. உயிரிழப்பை பொறுத்தமட்டில், 2018-ம் ஆண்டை விட குறைந்திருந்தாலும், 10,525 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதுபோல, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இந்தியாவிலுள்ள 53 நகரங்களில் சென்னையில் தான் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளன. சென்னையில் 6,671 சாலை விபத்துகளும், 2-வது இடத்திலுள்ள டெல்லியில் 5,349 விபத்துகளும், 3-வது இடத்திலுள்ள பெங்களூருவில் 4,684 விபத்துகளும் நடந்துள்ளன. கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த எர்னஸ்ட் கிரீன்வுட் கூறியபடி, சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் ஏற்படும் விபத்துகள் தானாக நடந்து விடுவதில்லை. அவைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதுபோலத் தான் இவ்வளவு சாலை விபத்துகளும் முறையான சாலைவிதிகள் பின்பற்றப்படாததாலும், அதிவேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ‘சீட் பெல்ட்’ அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றாலேயே நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிவேகமாக மோட்டார் வாகனங்கள் ஓட்டியதால், 2019-ம் ஆண்டு மட்டும் 8,832 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவின் உயிரிழப்பில் ஏறத்தாழ 10 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது.

மறைந்த பிரதமர் வாஜ்பாய் அமல்படுத்திய காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர சாலை திட்டத்தில் சாலைகள் எல்லாம் மிக அருமையாக போடப்பட்டுள்ளன. சாலைப் பயணம் வசதியாக இருக்கிறது, தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதையெல்லாம் மறுப்பதற்கில்லை. இப்போதெல்லாம் பெரும்பாலானோர் சாலை பயணத்தையே விரும்புகிற நிலையில், விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலை நாடுகளில் இதைவிட அதிக வேகத்தில் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்தாலும், இந்த அளவுக்கு விபத்துகள் ஏற்படுவதில்லை. எனவே அதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசும், சாலை விபத்துகளை குறைப்பதற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு சில நிமிடங்களுக்குள் உடனடி மருத்துவ சிகிச்சையும், ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்க வேண்டும். சாலைகளின் வடிவமைப்பில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் கருப்பு இடங்களில் கவனம் செலுத்தி குறைகளை களைய வேண்டும். போக்குவரத்து துறையினரும், போக்குவரத்து போலீசாரும் மிகத்தீவிரமாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த ஆண்டிலும், வரப்போகும் ஆண்டுகளிலும் சாலை விபத்துகள் குறைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிக்கி தவித்த 300 பேர் மீட்பு; 3,500 பேர் வெளியேற்றம் வணிக வளாகத்தில் பிடித்த தீயை அணைக்க 2-வது நாளாக போராட்டம்
நாக்பாடாவில் உள்ள வணிக வளாகத்தில் பிடித்த தீயை அணைக்க நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 5 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.
2. கார் மீது அரசு பஸ் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் பலி
கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
3. நந்தூர்பரில் பயங்கர விபத்து 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலி 34 பேர் காயம்
நந்தூர்பரில் 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
4. மழைநீரை அகற்றக்கோரி அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்
அரியாங்குப்பத்தில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. சங்கரன்கோவில் அருகே கார் மோதி மாணவர் சாவு வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சங்கரன்கோவில் அருகே கார் மோதி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.