உயிர் பலி வாங்கும் ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம்


உயிர் பலி வாங்கும் ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம்
x
தினத்தந்தி 13 Sep 2020 9:32 PM GMT (Updated: 2020-09-14T03:02:44+05:30)

தமிழ்நாட்டில் நேற்று, மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு நடந்தது. 238 மையங்களில் நடந்த இந்த தேர்வை ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று, மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு நடந்தது. 238 மையங்களில் நடந்த இந்த தேர்வை ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களுக்குள் செல்ல சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குகூட இல்லாத அளவு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் மருத்துவ தலைநகரம் சென்னை என்று அறிவுலகம் கருதுகிறது. அதனால்தான், சென்னையில் வந்து மருத்துவம் பார்க்க இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சென்னைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த மருத்துவர்கள் எல்லாம் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே மருத்துவர்களாகி சாதித்தவர்கள் ஆவார்கள். ‘நீட்’ தேர்வு இல்லாமலேயே இவர்களால் சிகரத்தை அடைய முடிந்தபோது, அந்த சிகரத்தை எட்டுவதற்கு ‘நீட்’ தேர்வு என்ற தடை எதற்கு? என்ற எதிர்ப்பு குரல் தமிழ்நாடு முழுவதும் பெரும் சுனாமி போல எழும்புகிறது.

நேற்று ‘நீட்’ தேர்வு எழுதவேண்டிய நிலையில், மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி இலக்கியம்பட்டி செந்தில் நகரை சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் ஆகிய 3 பேர் ஒரே நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் எல்லோருமே முதல் முறையாக ‘நீட்’ தேர்வு எழுதப்போகவேண்டிய மாணவர்கள் அல்ல. ஏற்கனவே, ஒரு முறை, 2 முறை என்று ‘நீட்’ தேர்வு எழுதி தேர்வு பெறாதவர்கள். தேர்வு எழுதி பழகிய இவர்களுக்கே ‘நீட்’ தேர்வு அச்சத்தை ஏற்படுத்தியது என்றால், மற்ற மாணவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? என்று அறிய முடிகிறது.

இந்த 3 பேர் மட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வு முறை தொடங்கியதில் இருந்து அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, மோனிஷா, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டை ஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் என பலர் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். உயிர் பலி கேட்கும் ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்ற காரணத்தால்தான் எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன. சட்டசபையிலும் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. ஆனால், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காததால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. எதற்காக திருப்பி அனுப்பப்பட்டது? என்ற காரணத்தை இன்னும் மத்திய அரசாங்கம் தெரிவிக்கவில்லை. உடனடியாக, அந்த காரணத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு வேண்டும் என்று சொல்லும் மாநிலங்கள் நடத்திக்கொள்ளட்டும். வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு அதில் இருந்து விலக்களிக்க சட்டத்தில் முன்னுதாரணம் இருக்கிறது.

இந்தி மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற உணர்வில் மத்திய அரசாங்கம் ஒரு சட்டத்தை 1963-ம் ஆண்டு நிறைவேற்றியது. அந்த சட்டத்தில் ஆங்கிலத்தையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் உள்ள விதிகள் நாடு முழுவதுக்குமானது, ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது என்பதை 1976-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விதி 1 (2) தெளிவாக கூறுகிறது. ஆக, அலுவல் மொழி சட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வில் இருந்தும் விலக்களிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறி கேட்கவேண்டும். மாணவச் செல்வங்களுக்கும் வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்திக்கும் மன தைரியமும் வேண்டும் என்பதை உணர்த்தும் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இனியும் உயிர் பலி வேண்டவே வேண்டாம்.

Next Story