முடிவு செய்யவேண்டியது பெற்றோரும், மாணவர்களும்தான்!


முடிவு செய்யவேண்டியது பெற்றோரும், மாணவர்களும்தான்!
x
தினத்தந்தி 14 Sep 2020 9:30 PM GMT (Updated: 14 Sep 2020 5:39 PM GMT)

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 7 ஊரடங்குகள் முடிந்து, இப்போது 8-வது ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவின் வேகம் இன்னும் குறையவில்லை.

பாறை மீது உட்கார்ந்துகொண்டு யார் மீது பாயலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் சிங்கம்போல, கொரோனா யாரை தாக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிங்கத்திடம் இருந்து நம்மை காப்பாற்றும் ஆயுதங்கள்தான் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு, சானிடைசர் கொண்டு கைகளை கழுவுதல், பெரும் கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் ஆகும். கூட்டம் கொரோனா பரவலை அதிகரிக்கும் என்ற காரணத்தால்தான் சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் திறக்கப்படவில்லை. என்ஜினீயரிங் இறுதிஆண்டு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

இப்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை, மத்திய அரசாங்க மொழியில் சொல்லப்போனால், 4-வது ஊரடங்கின் தளர்வில் செப்டம்பர் இறுதிவரை பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். ஆனால், 50 சதவீத ஆசிரியர்களை அழைத்து ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யலாம். வருகிற 21-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிக்கூடங்களுக்கு வரலாம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் இதற்காக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது. மாணவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரவழைப்பதை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப், இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டது. என்றாலும், பல மாநிலங்களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிக்கூடங்களை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதற்கு அனுமதிப்பது என்பது கொரோனா பரவலின் வாசலை திறந்துவிடுவதுபோலாகும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

அகில இந்திய பெற்றோர் சங்கத்தின் கருத்துப்படி, டெல்லியில் 80 சதவீத பெற்றோர் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். பெற்றோரை பொறுத்தமட்டில், ஒரு ஆண்டு கல்வி போனாலும் பரவாயில்லை, என் குழந்தையின் உயிர்தான் முக்கியம் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. உயிரா? கல்வியா? என்றால், உயிருக்குத்தான் முதலிடம் இருக்குமேதவிர, அதற்குப்பிறகுதான் மற்றவையெல்லாம். மாணவ பருவம் என்பது பிஞ்சுப்பருவம். எப்போதும் முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்பதெல்லாம் பள்ளிக்கூடங்களில் நண்பர்களை பார்க்கும்போது காற்றிலே பறந்துவிடும். வீட்டில் இருந்தால் பெற்றோர் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். பள்ளிக்கூடங்களில் ஒரு ஆசிரியர், அவர்களை எல்லாம் அதே அக்கறையோடு நிச்சயமாக பார்க்கமுடியாது. அதிலும் கிராமப்புற பள்ளிக்கூடங்களில் விசாலமான வகுப்பு அறைகள் இருப்பதற்கோ, நிறைய வகுப்பு அறைகள் இருப்பதற்கோ நிச்சயமாக வாய்ப்பு இருக்காது.

இந்தநிலையில், கல்வி அமைச்சர் செங்கோட்டையன், “கொரோனா தொற்று இருக்கும் இந்தக்கால கட்டத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு, மற்ற மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறதா? என்பதை அறிந்தபிறகு, முதல்-அமைச்சரோடு கலந்துபேசி, அதைப்பற்றி முதல்-அமைச்சர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார். ஆக, அவருடைய பதிலை பார்த்தால் கொரோனா பரவல் வெகுவாக குறையும்வரை இதுபற்றி அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது என்று தெரிகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் தங்களுடைய குழந்தைகள் பத்திரமாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது எண்ணங்களின்படி அரசு செயல்படும். பெற்றோரின் மனநிலையை அறிந்தபிறகுதான் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்” என்று உறுதிபட தெரிவித்துவிட்டார். இதுதான் சரியான நிலைப்பாடு. இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மாணவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று பெற்றோருக்கு தெரியும். பெற்றோரின் மனநிலை அதை நிச்சயமாக எதிரொலிக்கும்.

Next Story