நரேந்திரமோடி-70


நரேந்திரமோடி-70
x
தினத்தந்தி 16 Sep 2020 9:30 PM GMT (Updated: 2020-09-17T00:26:19+05:30)

வாழ்க்கை முழுவதும் பல்வேறு போராட்டங்களை சந்தித்து அதில் வெற்றிக்கண்டு உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்று நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கும் நரேந்திரமோடிக்கு இன்று 70-வது பிறந்தநாள்.

கடினமான உழைப்பும், இலக்கை நோக்கி செல்வதற்கு முயற்சிகளையும், பல்வேறு தியாகங்களோடு கலந்து செய்தால், எப்படி ஒரு மலையின் அடிவாரத்தில் உள்ளவர்கள் கரடுமுரடான பயணங்களை மேற்கொண்டு சிகரத்தை அடைய முடியுமோ, அதுபோல வாழ்க்கையின் உச்சிக்கு செல்லமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நரேந்திரமோடிதான்.

குஜராத் மாநிலம் வாத்நகரில் 1950-ம்ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நரேந்திரமோடி, குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறுவயதில், தான் டீக்கடையில் வேலைபார்த்ததையும், ரெயில் நிலையத்தில் டீ விற்றதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பெருமையாகக் கூறுபவர் நரேந்திரமோடி. 1970-ம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அவர், 1987-ல் பா.ஜ.க.வில் சேர்ந்து, குஜராத் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவரது பயணம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது.

2001 அக்டோபர் 7-ந்தேதி முதல் 2014 மே 22-ந் தேதிவரை 4 முறை குஜராத் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்று, நாட்டையே தன்னை உற்றுநோக்க வைத்தார். இந்த நேரத்தில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற்றது. அப்போது 8 ஆண்டுகளுக்குப்பிறகு சீன பிரதமர் ஜின்பிங்கை இந்தியா வரவழைத்து மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பெரும் சாதனை படைத்தார். 2019-ல் நடந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று 2-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். முதல்முறையாக அவர் பிரதமர் பொறுப்பு ஏற்ற 5 ஆண்டுகளில் கொண்டுவந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சைப்பெற பெரும் துணைபுரிந்தது. இதுபோல, தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவந்து ஏழை மக்கள் வசிக்கும் வீடுகளில் கழிவறைகள் கட்ட அரசு உதவி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச சமையல் கியாஸ் வழங்கும் திட்டம், அரசின் உதவிகள் எல்லாம் நேரடியாக ஏழை மக்களின் வங்கிக்கணக்குகளிலே செலுத்தும் திட்டம் என்று பல திட்டங்கள் அவருக்கு பெருமை சேர்த்து 2-வது முறையும் அவர் பிரதமர் பதவி ஏற்பதற்கு வழிகளை திறந்து வைத்தன. பா.ஜ.க.வின் நீண்ட நெடுநாள் எண்ணமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்கு அவரே சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.

இந்தமுறை விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள், சாலையோர கடைகாரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம், நடுத்தர மக்களுக்கு வீட்டுவசதி திட்டம் போன்ற பல திட்டங்கள் அவருக்கு சிறப்புச் செய்தன. என்றாலும், நரேந்திரமோடி தற்போது பெரும் புயலுக்கிடையே படகை செலுத்துவதுபோல, இந்த கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்பதிலும், கொரோனாவின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை சீர்செய்வதிலும் பெரும் பொறுப்பு அவருக்கு காத்து நிற்கிறது. அவருடைய வாழ்க்கை முழுவதுமே மேடுபள்ளங்களை சந்தித்தது என்ற வகையில், இந்த பள்ளத்தில் இருந்தும் நிச்சயமாக இந்தியா மீண்டுவிடும் என்பது அவருடைய உறுதியான பேச்சுகளில் இருந்தே தெளிவாக தெரிகிறது. சென்னையில் நடந்த “தினத்தந்தி” பவளவிழாவில் பங்கேற்ற நாளில் இருந்து, எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அது தேசிய அளவிலான கூட்டம் என்றாலும் சரி, சர்வதேச அளவிலான கூட்டம் என்றாலும் சரி, திருக்குறள் போன்ற பல்வேறு தமிழ் இலக்கியங்களை அவர் மேற்கோள் காட்டி பேசுகிறார் என்ற வகையில், தமிழ்மீது பற்று உள்ளவர் என்று தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்ச்சி அடைந்து தமிழகம் அவருக்கு பிறந்ததாள் வாழ்த்து கூறுகிறது.

Next Story